தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக, அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பல பிரிவுகளாக சிதறி போனது, அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற தனது கட்சியை தொடங்கியுள்ளார். அ.தி.மு.க.வின் சிதைவும், விஜய்யின் வருகையும் எப்படி தமிழக அரசியலை மாற்றி அமைக்க போகின்றன என்பது குறித்த விவாதம் சீரியஸாக நடந்து வருகிறது.
அ.தி.மு.க.வின் பலவீனம்: விஜய்க்கு லாபம்?
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா என்ற இரண்டு ஆளுமைகளின் பின்னால் அணிவகுத்து நின்ற அ.தி.மு.க. தொண்டர்கள், தற்போது சரியான தலைமை இல்லாததால் குழப்பத்தில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் கட்சி இருந்தாலும், ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் தனித்தனி அணியாக செயல்படுவது அ.தி.மு.க.வின் பலத்தை வெகுவாக குறைத்துள்ளது. இது அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கியை பிளவுபடுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில்தான், நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். அவரது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் ஏற்கெனவே உள்ளாட்சி தேர்தல்களில் சில இடங்களில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளது. அ.தி.மு.க. வாக்குகள் பிளவுபடும்போது, அந்த வாக்குகள் கண்டிப்பாக திமுகவுக்கு செல்லாது. திமுகவை எதிர்க்கும் ஒரு கட்சிக்கு தான் செல்லும், அந்த வகையில் தவெகவுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
விஜய் மக்கள் த.வெ.க, அ.தி.மு.க.வின் வாக்குகளை ஏன் கவரும்?
புதிய தலைமை: அ.தி.மு.க. தொண்டர்கள், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போன்ற ஒரு வலிமையான, கவர்ச்சியான தலைமையை தேடி வருகின்றனர். நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவரை ‘தளபதி’ என்று அழைப்பதோடு, அவரை ஒரு மாற்று தலைவராக பார்க்கின்றனர்.
இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள்: அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் மீதும் அதிருப்தியில் உள்ள இளைஞர்கள், முதல் முறையாக வாக்களிக்க போகும் வாக்காளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் ஆகியோர் விஜய்யின் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது.
அதிமுகவினரின் அதிருப்தி: அ.தி.மு.க.வில் தலைமை பதவிக்கான கோஷ்டி பூசல்கள், தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளன. இதனால், ஒரு புதிய கட்சியில் இணைந்து தங்கள் அரசியல் எதிர்காலத்தை தேட அவர்கள் முயற்சி செய்யக்கூடும்.
தி.மு.க.வை தோற்கடிக்கும் நம்பிக்கை: அ.தி.மு.க. பல துண்டுகளாக பிரிந்திருப்பதால், தி.மு.க.வை அது தோற்கடிக்கும் என்ற நம்பிக்கை தொண்டர்களிடம் குறைந்துள்ளது. இந்த வெற்றிடத்தை விஜய் தனது கட்சியின் மூலம் நிரப்பக்கூடும் என்று பலர் நினைக்கின்றனர்.
செங்கோட்டையனின் முடிவு திருப்புமுனையாகுமா?
அ.தி.மு.க.வில் நீண்டகாலம் இருந்துவரும் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் சமீபகாலமாக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அவர் மகிழ்ச்சியில் இல்லை என்றும், நாலை அவர் ஒரு முக்கிய முடிவை அறிவிப்பார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
செங்கோட்டையனின் முடிவு ஏன் முக்கியம்?
முக்கிய ஆளுமை: செங்கோட்டையன் கொங்கு தொகுதியில் செல்வாக்கு உள்ள ஒரு மூத்த தலைவர். அவர் எடுக்கும் முடிவு பலரது கவனத்தையும் ஈர்க்கும்.
அணி மாற்றம்: செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து விலகி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலாவுடன் சேர்ந்து ஒரு புதிய அணியை உருவாக்கலாம், அல்லது புதியதாக கட்சி தொடங்கலாம். அல்லது நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் சொல்லலாம்.. இதில் எது நடந்தாலும் ஈபிஎஸ் அதிமுகவுக்கு சிக்கல் தான்.
விஜய்யுடன் கூட்டணி?: அரசியல் நோக்கர்கள், செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் சிலர், விஜய்யுடன் கைகோர்க்கும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இது அ.தி.மு.க. வாக்குகளை தமிழக வெற்றி கழகம் வசப்படுத்த உதவும்.
மொத்தத்தில், அ.தி.மு.க.வின் பிளவு, விஜய் அரசியலுக்கு வருவது, மற்றும் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களின் அதிருப்தி ஆகியவை தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிகுறிகளாக தெரிகின்றன. இந்த அரசியல் மாற்றங்கள், தி.மு.க.வை வீழ்த்தும் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
