தமிழக பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம். சுவாமி கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான பனிப்போர் குறித்து கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட போதே நிர்மலா சீதாராமன் விரும்பவில்லை என்றும், அண்ணாமலையின் தலைமையால் தமிழகத்தில் கட்சி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கருதியதாகவும் பிரகாஷ் எம். சுவாமி தெரிவித்தார்.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நடத்திய கூட்டத்தில், அண்ணாமலை தவிர்த்து பிற தமிழக தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும், கூட்டணியை உருவாக்க தவறியதற்காக அவர்களை கடிந்துகொண்டதாகவும் பிரகாஷ் எம். சுவாமி கூறினார்.
சமீபத்தில் நடைபெற்ற முக்கிய குழுக் கூட்டங்கள் மற்றும் குடியரசு தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொள்ளாதது, அவரது அதிருப்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. நிர்மலா சீதாராமனுடனான மோதல் காரணமாகவே அண்ணாமலை இந்த கூட்டங்களைத் தவிர்த்து வருகிறார் என்றும் பிரகாஷ் எம். சுவாமி கூறினார்.
இதற்கு முன் நடந்த தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் பாஜகவின் முடிவு, அண்ணாமலையின் தனிப்பட்ட ஈகோ காரணமாக எடுக்கப்பட்டது என்று நிர்மலா சீதாராமன் நினைப்பதாகவும் பிரகாஷ் எம். சுவாமி கூறினார். எனினும், அண்ணாமலைக்கு ஆதரவானவர்கள், அதிமுக கூட்டணிக்கு ஆர்வம் காட்டவில்லை என்று அவர் மத்திய தலைமைக்கு தெரிவித்ததாலேயே மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான மத்திய தலைமை தனித்து போட்டியிட முடிவு செய்தது என்று கூறப்படுகிறது.
பாஜகவின் இந்த உட்கட்சி மோதல், வரவிருக்கும் தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்றும், இது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்றும் பிரகாஷ் எம். சுவாமி கூறியதோடு, இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, தினகரன், ஓ. பன்னீர்செல்வம், சசிகலா போன்ற பிரிவினரை தூண்டிவிட்டு, அதிமுகவின் வாக்குகளை பிரிக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
