இந்தியாவின் ஆடைச் சந்தையில், குறிப்பாக ஹெச் & எம் (H&M) மற்றும் சுடியோ (Zudio) போன்ற முன்னணி பிராண்டுகளின் கடைகளில் அலமாரிகள் காலியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், இந்தியா, வங்காளதேசத்துடனான நிலவழி ஆடை இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, அதாவது இந்த ஆண்டு மே மாதம், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் புதிய விதிகளை அறிவித்தது. அதன்படி, வங்காளதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகள், கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள இரண்டு துறைமுகங்கள் வழியாக மட்டுமே இந்தியாவுக்குள் நுழைய முடியும்.
இதற்கு முன்பு, நில எல்லைகள் வழியாக லாரிகளில் தினசரி ஆடை இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்த மாற்றம், கப்பல் வழி போக்குவரத்தில் 2 முதல் 3 வாரங்கள் வரை தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விரைவான விநியோக சங்கிலியை நம்பியிருந்த சில்லறை வர்த்தகர்கள், தற்போது இருப்பு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் விளைவாக, ரூ.1,000க்கும் குறைவான விலையுள்ள ஆடைகள் கடைகளில் கிடைப்பதில்லை. இது லைஃப்ஸ்டைல் மற்றும் சுடியோ போன்ற நிறுவனங்களின் விற்பனையை பெரிதும் பாதித்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, வங்காளதேசத்திலிருந்து இந்தியாவின் ஆடை இறக்குமதி ஆண்டுக்கு 25% குறைந்துள்ளது. இந்த நெருக்கடி, செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான பண்டிகை காலத்தை ஒட்டி ஏற்பட்டுள்ளது. சில்லறை வர்த்தகர்கள், பண்டிகை விற்பனையை நம்பியிருக்கும் நிலையில், இந்த தடை பெரும் இழப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. வங்கதேச ஏற்றுமதியும் இந்தியாவை நம்பியிருந்ததால் தற்போது அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் அலறுகின்றனர்.
சீனாவுக்கு பிறகு உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளர் வங்காளதேசம். இந்தியா மட்டும் ஆண்டுக்கு ரூ. 5,000 முதல் 6,000 கோடி மதிப்பிலான ஆடைகளை வங்காளதேசத்திலிருந்து இறக்குமதி செய்கிறது. இந்த தடையால், கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆடை உற்பத்தி செலவு 3 முதல் 5% உயர்ந்துள்ளது.
இந்த புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு அதிகாரபூர்வமான காரணம் எதுவும் இல்லை. ஆனால், வங்காளதேச இடைக்கால தலைவர் முஹம்மது யூனுஸ், சீனாவுக்கு சென்றபோது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் கடல்வழி பாதைக்கு வங்காளதேசத்தை நம்பி இருப்பதாகவும், வங்காளதேசம் அந்த மாநிலங்களின் “கடல்வழி வாயிலாக” இருப்பதாகவும் கூறியது இந்தியாவை அதிருப்தியடைய செய்தது. அரசியல் தலைவர்கள் பலர் இந்த அறிக்கையை ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக கருதினர். இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே இருந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது, வர்த்தகம், பொருளாதாரம் என்பதையும் தாண்டி, இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் சார்ந்த இந்தியாவின் நிலைப்பாட்டை காட்டுவதாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
