இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இரண்டு இடங்களை தமிழ்நாடு அரசு இறுதி செய்துள்ளது. இந்த திட்டம், தென் மாவட்டங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் முதலில் ஐந்து இடங்களைப் பரிசீலித்தது. அதில், தற்போது உச்சிப்புளி மற்றும் கீழக்கரை ஆகிய இரண்டு இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
முதலில் 700 ஏக்கர் நிலம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்ட நிலையில், தற்போது இறுதி செய்யப்பட்ட இடங்களின் அடிப்படையில் 500 முதல் 600 ஏக்கர் வரை போதுமானது என்று கூறப்படுகிறது.
உச்சிப்புளியில் விமான நிலையம் அமைக்க, கடற்படையின் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், தமிழ்நாடு அரசு, இராமேஸ்வரத்திற்கு மிக அருகில் உள்ள மற்ற இடங்களையும் ஆராயுமாறு TIDCO-விடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கோரிக்கையின்படி, பிராந்திய விமான இணைப்புத் திட்டத்தின் கீழ் இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்தது. சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதே இதன் முக்கிய நோக்கம்.
விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தின் வடிவமைப்பு, புவியியல் அமைப்பு, மண் தன்மை, காற்றின் திசை மற்றும் பிற விமான நிலையங்களுக்கு அருகாமையில் இருப்பது போன்ற காரணிகளை பொறுத்து இடங்கள் இறுதி செய்யப்படுகின்றன. இந்திய விமான நிலைய ஆணையம் இந்த இடங்களை ஆய்வு செய்த பிறகு, அடுத்த ஆண்டுக்குள் ஒரு இடம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாக வருகை தருகின்றனர். அதேபோல், பலர் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து 150 கி.மீ. பயணம் செய்து இராமேஸ்வரத்திற்கு வருகின்றனர்.
இந்த புதிய விமான நிலையம், இராமநாதபுரம் மட்டுமல்லாமல், விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை போன்ற அண்டை மாவட்டங்களுக்கும் பேருதவியாக இருக்கும். இது தமிழக அரசு பரந்தூர் மற்றும் ஓசூரில் அமைத்து வரும் விமான நிலையங்களுக்கு பிறகு, விமான இணைப்பை மேம்படுத்தும் மூன்றாவது முக்கிய திட்டமாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
