கிராமப்புறங்களில் வீடு இல்லாத அனைவருக்கும், அதேபோல் சேதமடைந்த அல்லது மண் வீடுகளில் வசிப்பவர்களுக்கும் நிரந்தரமான வீடுகளை கட்டி தரும் நோக்கத்துடன் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய திட்டம் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) ஆகும். இத்திட்டத்தின் கீழ், சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியின் அளவு வேறுபடுகிறது.
மலைப்பகுதிகளுக்கான நிதி உதவி
மலைப்பகுதிகள், கடினமான பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற யூனியன் பிரதேசங்கள் உட்பட இத்திட்டத்தின் கீழ் வரும் சிறப்புப் பகுதிகளுக்கு, ஒரு வீட்டை கட்டுவதற்கான முழுமையான நிதி உதவியாக ரூ.1.30 லட்சம் வழங்கப்படுகிறது. சமவெளி பகுதிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் வழங்கப்படுவதுடன் ஒப்பிடுகையில், இது ரூ.10,000 அதிகமாகும். இந்த கூடுதல் நிதி, மலைப்பகுதிகளில் நிலவும் போக்குவரத்துச் செலவு மற்றும் கட்டுமானச் சவால்களை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது.
இந்த நிதி உதவியைத் தவிர, பயனாளிகளுக்கு மேலும் பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. சுத்த பாரத் மிஷன் – கிராமின் (SBM-G) திட்டத்தின் கீழ், கழிவறை கட்டுவதற்காக ரூ.12,000 வரை கூடுதல் நிதி உதவி அளிக்கப்படுகிறது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) உடன் இணைக்கப்பட்டு, பயனாளிகள் தங்கள் வீட்டை கட்டுவதற்கு தேவையான கூலித்தொகையாக 90 முதல் 95 நாட்களுக்கு ஊதியமும் பெற முடியும். தேவைப்பட்டால், பயனாளிகள் ரூ.70,000 வரை குறைந்த வட்டி விகிதத்தில் வங்கி கடனையும் பெறலாம்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், வீடு இல்லாத அல்லது சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு பாதுகாப்பான, நிரந்தரமான வீட்டை உறுதி செய்வதாகும். இதன் மூலம், கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் கணிசமாக மேம்படுத்தப்படுகிறது. இந்த வீடுகள் குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டதாக இருக்க வேண்டும், மேலும் அதில் சமையல் செய்வதற்கான இடமும் அடங்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
