சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு மற்றும் அவரது அரசியல் பாதை குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் அரசியல் விமர்சகர் மணி இந்த மாநாடு குறித்தும், விஜய் அரசியல் குறித்தும், அவரது அரசியல் எதிர்காலம் குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
விஜயகாந்த்தை விட அதிக ஆதரவு?
அரசியல் விமர்சகர் மணியின் கூற்றுப்படி, விஜய்க்கு இருக்கும் மக்கள் ஆதரவு, இதற்கு முன் அரசியலில் நுழைந்த சிவாஜி கணேசன், கமலஹாசன், விஜயகாந்த் ஆகியோரை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக, 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மத்தியில், பத்து பேரில் குறைந்தது ஏழு பேர் விஜய்க்கு வாக்களிப்பதாக உறுதியாக தெரிவிக்கின்றனர். இந்த ஆதரவில் 60% வாக்கு வங்கியாக மாறினால் கூட, அது தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
திமுக – அதிமுகவிற்கு மாற்று தேவைப்படுகிறதா?
தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்று தேவைப்படுகிறதா என்றால் கட்டாயம் ‘ஆம்’ என்பது தான் பதில் . இந்த கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என விரும்பும் மக்கள், ஏறக்குறைய 20% முதல் 30% வரை உள்ளனர். “ஐந்து வருடங்கள் ஒருவர் கொள்ளையடிப்பார், அடுத்த ஐந்து வருடங்கள் மற்றவர் கொள்ளையடிப்பார், இருவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை” என்று மணி தெரிவித்தார்.
விஜய் தனது இந்த இரண்டாவது பொதுக்கூட்டத்தில் தனது ரசிகர்களை மனதில் கொண்டு பேசுவதாகவும், அரசியலுக்குத் தேவையான முக்கியமான விஷயங்களை படிப்படியாகப் பேசுவார் என்றும் மணி தெரிவித்தார்.
மாநாட்டில் ஸ்டாலினை ‘அங்கிள்’ என்று விஜய் குறிப்பிட்டது, ஸ்டாலினின் ‘அப்பா’ பிம்பத்தை உடைக்கும் ஒரு அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. இது, அரசியல் களத்தில் சரியான ஒரு உத்தி என்றும், இதில் எந்த தவறும் இல்லை என்றும் மணி தெரிவித்தார்.
கூட்டணி குறித்த கணிப்புகள்
விஜய்யின் தற்போதைய அரசியல் நிலை குறித்து பல்வேறு கணிப்புகள் நிலவுகின்றன. அவர் தனியாகப் போட்டியிட்டால், குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பெற்றாலும், வெற்றி பெறுவது கடினம். ஒருவேளை, அவர் வலுவான கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகும்.
விஜயகாந்த் உதாரணம்: விஜயகாந்த் தனது முதல் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற்றார். ஆனால் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
1996 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதாவை தோற்கடித்த மூப்பனார், 2001 தேர்தலில் கருணாநிதியை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். இது போன்ற சரியான கூட்டணி முடிவுகளை எடுப்பவர்களே அரசியலில் நிலைத்து நிற்பார்கள்.
விஜய் தனியாக களம் இறங்குவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்பது அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். குறிப்பாக, அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி தற்போது பலவீனமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால், விஜய்க்கு குறிப்பிடத்தக்க வெற்றி வாய்ப்பு இருக்கும். ஆனால், இது தொடர்பாக அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் மணி தெரிவித்தார்.
தேர்தல் கணிப்புகள் மற்றும் எதிர்காலம்
வரும் 2026 சட்டமன்றத் தேர்தல், 2019 மற்றும் 2024 தேர்தல்களை போல திமுகவிற்கு எளிதாக இருக்காது. 2021 சட்டமன்ற தேர்தலை அளவுகோலாக கொண்டு பார்த்தால், இந்த முறை கடுமையான போட்டி இருக்கும். தமிழகத்தில் தற்போது திமுக அரசுக்கு எதிராக பொதுவான அதிருப்தி கடுமையாக நிலவுகிறது. எதிர்க்கட்சிகளால் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஊடகங்களும் அதைப்பற்றி பேச மறுக்கின்றன. ஆனால், 2026 தேர்தலில் இந்த அதிருப்தி வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தற்போது தனது பலத்தை உணர்ந்து செயல்பட்டு வருவதாகவும், வரும் நாட்களில் அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை மேலும் தெளிவாக தெரிவிப்பார் என்றும் மணி தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
