டாலருக்கு மாற்றாக தங்கம் சாத்தியமா? தங்கத்தில் வர்த்தகம் செய்தால் என்ன ஆபத்து வரும்? மாற்று நாணயம் தான் சரியான தேர்வு.. பிரிக்ஸ் நாடுகள் தீவிர ஆலோசனை..!

உலக நாணய சந்தையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறைந்து வரும் நிலையில், அதற்கு மாற்றான நாணயங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து உலக நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. டாலர் ஒரு பொருளாதார நாணயமாக மட்டும்…

dollar vs gold

உலக நாணய சந்தையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறைந்து வரும் நிலையில், அதற்கு மாற்றான நாணயங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து உலக நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. டாலர் ஒரு பொருளாதார நாணயமாக மட்டும் அல்லாமல், ஒரு அரசியல் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுவதால், இந்தியா மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றன.

கடந்த இருபது ஆண்டுகளாக டாலர் ஒரு “ஆயுதமாக” மாறியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையுடன் ஒத்துப்போகாத நாடுகளுக்கு எதிராக டாலர் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

டாலருக்கு மாற்றாக தங்கம் சாத்தியமா?

டாலரின் ஆதிக்கம் குறைந்து வரும் நிலையில், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளது உண்மைதான். குறிப்பாக, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கின்றன. இருப்பினும், டாலருக்கு மாற்றாக தங்கத்தை வர்த்தகத்திற்கு பயன்படுத்த முடியுமா என்பது ஒரு விவாதத்துக்குரிய கேள்வி.

தங்கத்தின் நடைமுறை சிக்கல்கள்: தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருந்தாலும், அதை அன்றாட வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவது நடைமுறைக்கு உகந்ததல்ல. ஒரு நாடு தனது தங்க இருப்புகளை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய தொடங்கினால், தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தங்கத்தின் மதிப்பை குறைத்து, வர்த்தக பரிவர்த்தனைகளில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும்.

வரலாற்றுப் பின்னணி: 1971ஆம் ஆண்டுக்கு முன்பு உலகம் தங்க தரநிலையை பின்பற்றி வந்தது. ஆனால், அன்றாட வர்த்தகத்தின் வேகத்திற்கும், தங்கத்தின் இருப்புகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்ததால், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் டாலரை தங்கத்திலிருந்து துண்டித்தார். இந்த நகர்வு, உலக பொருளாதாரத்தில் டாலருக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து தங்கம் ஒரு சிறந்த முதலீடாக பார்க்கப்பட்டாலும், அது நாணயமாக பயன்படுத்தப்படவில்லை.

தங்கம் Vs டாலர்: டாலர் பலவீனமாக தோன்றினாலும், உலக நாடுகள் டிரில்லியன் கணக்கான டாலர்களை இருப்புக்களாக வைத்துள்ளன. மேலும், அமெரிக்க பத்திரங்களில் டாலரிலேயே முதலீடு செய்கின்றன. இந்த வர்த்தக வசதி டாலரின் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது. மேலும், அமெரிக்கா தனது அரசியல் நலன்களுக்காக டாலரைப் பயன்படுத்தினாலும், பெரும்பாலான நாடுகள் டாலர் மூலம் வர்த்தகம் செய்து பயனடைந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, டாலரின் ஆதிக்கம் குறைந்து வரும் நிலையில், தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருக்கலாம். ஆனால், அது டாலருக்கு மாற்றாக ஒரு நடைமுறை நாணயமாக மாறுவது என்பது எளிதானதல்ல என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். எனவே பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு இணையாக மாற்று கரன்சியை தேர்வு செய்வது மட்டுமே சரியாக இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.