ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டபோதும், எந்த ஒரு முக்கியமான அமைதி ஒப்பந்தத்திற்கும் இட்டு செல்லவில்லை என்றும், மாறாக, இது புதினுக்கு ஒரு ஆரோக்கியமான வெற்றியை அளித்துள்ளது என்றும் உலக அரசியல் வல்லுனர்கள் பேசி வருகின்றனர்.
புதினின் இமேஜ் உயர்வு:
குறிப்பாக புதின் சர்வதேச அளவில் “போர் குற்றவாளி” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளபோதிலும், அமெரிக்க அதிபருக்கு சமமான மரியாதையுடன் அமெரிக்க மண்ணில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இது புதினின் சர்வதேச பிம்பத்தை உயர்த்துவதாக கருதப்படுகிறது.
டிரம்பின் தோல்வி:
இந்த சந்திப்பின் மூலம் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தி அதன் மூலம் நோபல் பரிசு பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம் என்ற டிரம்பின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்ததாகவும், இந்த சந்திப்பின் மூலம் அவர் எதுவும் பெறாமல் “வெறும் கையுடன்” அவர் திரும்பியதாகவும் அமெரிக்கர்களே ட்ரோல் செய்து வருகின்றனர்.
அமைதி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் இல்லை:
இந்த சந்திப்பு ஏராளமான புகைப்படங்கள் மற்றும் கைகுலுக்கல்களை உருவாக்கினாலும், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து எந்தவொரு முக்கியமான உடன்பாடும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக, உக்ரைனில் நடந்து வரும் மோதல் தீர்க்கப்படாமல் உள்ளது.
உக்ரைனுக்கு நன்மை:
ஆனால் அதே நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இந்த சந்திப்பு தோல்வியடைந்ததால் மறைமுகமாக பயனடைந்தார் என்றும், ஏனெனில், எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் உக்ரைனின் பாதுகாப்பை பலவீனப்படுத்தியிருக்கக்கூடும் என்று அரசியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளின் சந்தேகம்:
ஐரோப்பிய தலைவர்கள் இந்த சந்திப்பின் விளைவுகளை உன்னிப்பாக கவனித்தனர். இது பார்வையாளர்களுக்கு கவர்ச்சிகரமான காட்சிகளை வழங்கியபோதிலும், நீடித்த அமைதிக்கான தெளிவான பாதை எதுவும் உருவாகவில்லை என்பது ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு ஏமாற்றம் தான். இந்த சந்திப்பின்மூலம் டிரம்ப் எதையும் சாதிக்கவில்லை என்பதை ஐரோப்பா பொதுவெளியில் பேசிவருவது டிரம்பின் இமேஜை அடித்து நொறுக்கியுள்ளது.
இந்த சந்திப்பு டிரம்பின் பலவீனமான ராஜதந்திர அணுகுமுறையை வெளிப்படுத்தியது என்றும், புதினுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை டிரம்பே அவருக்கே தெரியாமல் பெற்று கொடுக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திவிட்டார் என்று தான் பலரும் இந்த சந்திப்பு குறித்து பேசி வருகின்றனர்.
மொத்தத்தில் இந்த சந்திப்பின் மூலம் புதின் உலக நாடுகளிடையே குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் தனது இமேஜை உயர்த்தி கொண்டார் என்பதும், டிரம்பின் ராஜதந்திரங்கள் எதுவும் புதினிடம் பலிக்காது என்பதை உலகிற்கு உணர்த்தி இரண்டு லட்டுகளை பெற்றுவிட்டார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
