ஒரு திரைப்படத்தில் வில்லன் வலுவாக இருந்தால் தான் கதாநாயகனுக்கு மதிப்பு உயரும்” என்பதுபோல், தி.மு.க.வின் வளர்ச்சிக்கு அதன் எதிரிகளே முக்கிய பலமாக இருந்து வருகிறார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியை வலுப்படுத்தி வரும் தி.மு.க., தனது எதிரிகளை மாற்றிக்கொண்டே வருகிறது. : தி.மு.க.வின் முதல் 25 ஆண்டுகளுக்கு முக்கிய எதிரியாக காங்கிரஸ் கட்சி இருந்தது. பின்னர், காங்கிரஸ் வலுவிழந்து தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் நிலைக்கு வந்தது.
அதன் பிறகு, அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க. அரசியல் செய்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. வலுவிழந்து வருகிறது. இந்தச் சூழலில், தி.மு.க., பா.ஜ.க.வை தனது முக்கிய எதிரியாக மாற்றிக்கொண்டது. 2019, 2021 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களில், பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை சேகரித்து தி.மு.க. வெற்றி பெற்றது.
ஆனால் தற்போது, அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. இருந்தபோது தமிழகத்தில் கணிசமான மக்கள் ஆதரவை பெற்றுள்ளது. எனவே, “பா.ஜ.க. வந்துவிடும்” என்று தி.மு.க. மக்களிடம் கூறி இனி வாக்குகளை பெற முடியாது. பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் குறைந்துவரும் நிலையில், தி.மு.க.வுக்கு ஒரு புதிய எதிரி தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்தச் சூழலில், நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். எனவே, இனி வரும் சில ஆண்டுகளுக்கு, தமிழக அரசியலில் தி.மு.க. மற்றும் ‘தமிழக வெற்றி கழகம்’ ஆகிய இரண்டுமே எதிர் எதிர் துருவங்களாக செயல்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது தி.மு.க.வின் அரசியல் வியூகத்திற்கு புதிய சவால்களை உருவாக்கும் என்றும் கருதப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
