நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற முதுமொழிக்கு ஏற்ப, தமிழக அரசு, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகிறது. “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ், தமிழக அரசு சார்பில் பல்வேறு இடங்களில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த முகாம்களின் முக்கிய நோக்கம், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதே ஆகும். இதன் மூலம், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அவதிப்படும் நிலையை தவிர்ப்பதுடன், மருத்துவ செலவுகளுக்காக மக்களின் வருமானமும், சேமிப்பும் வீணாவதை தடுப்பதுதான்.
இலவச மருத்துவ முகாமின் சேவைகள்
இந்தச் சிறப்பு மருத்துவ முகாமில், மக்களின் உடல்நலனை காக்கும் வகையில் பல துறைகளை சார்ந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பங்கேற்றுச் சிகிச்சை அளிக்கின்றனர். இந்த முகாம்களில் வழங்கப்படும் முக்கிய மருத்துவ சேவைகள்:
பொது மருத்துவம்: உடல்நலன் தொடர்பான பொதுவான பிரச்சினைகள் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை.
பொது அறுவை சிகிச்சை மருத்துவம்: சிறிய அளவிலான அறுவை சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான ஆலோசனைகள்.
இருதய மருத்துவம்: இதய நோய்கள் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள்.
எலும்பியல் மருத்துவம்: எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்சினைகளுக்கான சிகிச்சைகள்.
நரம்பியல் மருத்துவம்: நரம்பு மண்டலம் தொடர்பான நோய்களுக்கான பரிசோதனைகள்.
தோல் மருத்துவம்: தோல் நோய்களுக்கான சிகிச்சை.
காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம்: இ.என்.டி. தொடர்பான பிரச்சினைகளுக்குச் சிகிச்சை.
மகப்பேறு மருத்துவம்: கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனைகள்.
இயன்முறை மருத்துவம் (Physiotherapy): உடல் இயக்க சிகிச்சைக்கான ஆலோசனைகள்.
பல் மருத்துவம்: பல் மற்றும் வாய் ஆரோக்கியம் தொடர்பான சிகிச்சை.
கண் மருத்துவம்: கண்பார்வை பரிசோதனைகள் மற்றும் கண் நோய்களுக்கான சிகிச்சை.
மனநல மருத்துவம்: மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனைகள்.
குழந்தைகள் நல மருத்துவம்: குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள்.
நுரையீரல் மருத்துவம்: நுரையீரல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களுக்கான பரிசோதனைகள்.
நீரிழிவு நோய் மருத்துவம்: சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை.
கதிரியக்கவியல் மருத்துவம்: கதிரியக்கப் பரிசோதனை மூலம் நோய்களைக் கண்டறிதல்.
இந்த இலவச மருத்துவ முகாம்கள் மூலம், கிராமப்புற மற்றும் ஏழை மக்கள், உயர்தர மருத்துவ சேவைகளை எளிதாக பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். இந்த முயற்சி, தமிழ்நாட்டை கல்வியிலும், பொருளாதாரத்திலும் மட்டுமின்றி, ஆரோக்கியத்திலும் முதன்மை மாநிலமாக மாற்ற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
