சர்வலோகஜெகன்மாதான்னு நாம அம்பிகையை சொல்கிறோம். உலகத்தில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் அவள் தாய். அந்தத் தாய்க்கு வளைகாப்பிட்டு நலங்கு இடக்கூடிய நாளில் நாமும் அவளிடம் வேண்டும்போது அந்த உள்ளம் இரங்கி இல்லாதவர்க்குக்கூட இருப்பதாக ஆக்கித் தரும் தன்மை அம்பிகைக்கு உண்டு. அதனால்தான் அம்பிகையை இந்த நாளில் வழிபாடு செய்வது அவ்வளவு சிறப்பு.
ஆடிப்பூரம் எந்த நாளில் எப்போது வருகிறது என்று பார்க்கலாம். 27.7.2025 அன்று மாலை 6.55 மணி முதல் மறுநாள் இரவு 8 மணி வரை பூரம் நட்சத்திரம் வருகிறது. அதனால் ஆடிப்பூரத்தின் வழிபாடு 28ம் தேதி கணக்கில் கொள்ளப்படுகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.20மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்யலாம். அல்லது 9.10 மணி முதல் 10.20க்குள் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
வேலைக்குப் போய் வருபவர்களுக்காக இங்கு 2 நேரம் தரப்பட்டுள்ளது. வீட்டில் அம்பாளின் திருவுருவப்படம், ஒரு மனைப்பலகை எடுத்து நல்ல தண்ணீர் தெளித்து கோலம் போட்டு சிகப்புத் துணியை அந்த மனைப்பலகையில் விரித்து அம்பாளை அதில் உட்கார வைக்கணும். கோவிலில் எப்படி வளைகாப்பு செய்து நலங்கு இடுவார்களோ அதே போல நாமும் செய்யணும். விக்கிரகம் வைத்துள்ளவர்கள் அதை வைக்கலாம். அல்லது திருவுருவப்படம் வைக்கலாம்.
மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளங்கள். கண்ணாடி வளையல்களை மாலையாக சாத்த வேண்டும். நைவேத்தியமாக பழங்கள், சர்க்கரைப் பொங்கல், பாயசம் என ஏதாவது ஒன்றை வைக்கலாம். அம்பிகையின் பதிகங்கள் படிங்க. அபிராமி அந்தாதி படிங்க. குழந்தை வரம், கல்யாணம் ஆக திருப்புகழைப் பாராயணம் செய்யலாம். தீப தூப ஆராதனை, மங்கல ஆரத்தி காட்டி திருஷ்டி கழிக்க வேண்டும்.
பூஜை முடிந்ததும் நாம அம்பாளை எடுத்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். யாருக்காக வேண்டுகிறோமோ அந்தப் பையனையோ, பொண்ணையோ மனைப்பலகையில் உட்கார வைத்து அவர்களுக்கு நலங்கு வைக்க வேண்டும். பெரியவர்கள், வயதானவர்கள் வைக்கலாம். யாருமே இல்லன்னா கணவனே மனைவிக்கு நலங்கு சடங்குகளைச் செய்யலாம். அவங்களுக்கு வளையல் போட்டு விடுங்க. பசங்களுக்கு சீக்கிரமா கல்யாணம் ஆகணும்னு வேண்டி அம்பாளை வழிபடச் சொல்லுங்க. முடிந்ததும் நைவேத்தியத்தை சாப்பிடலாம்.
கல்யாணம் ஆகி, குழந்தையும் உள்ளவர்கள் அபிராமி அந்தாதியை முழுமையாகப் படிக்கலாம். பக்கத்தில் உள்ள கோவிலுக்குப் போய் வழிபடலாம். அங்கு வளையல் கொடுக்கலாம். பூஜித்ததும் அங்கு வரக்கூடிய பக்தர்களுக்குக் கொடுத்து விட்டு வரலாம். இது சக்தி வாய்ந்த வழிபாடு. நம்பிக்கையோட அம்பாளை வேண்டி வழிபட்டால் நிச்சயம் நல்ல மணமகள், மணமகன், மருமகள், மருமகன், குழந்தை வரம் என உங்களுக்கு என்ன வேண்டுமோ அது கிடைக்கும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



