நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றி கழகம்’ மூலம் தமிழக அரசியல் களத்தில் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அவர் தனது முதல் மாநாட்டில் வெளிப்படுத்திய கொள்கையே இப்போதும் நீடிப்பதாக அவரது தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “நம்மை நம்பி கட்சிகள் வந்தால் அவர்களுக்கு அமைச்சரவைகளில் இடம் கொடுப்போம். ஒருவேளை வராவிட்டாலும், நாம் தனித்து போட்டி கண்டு வெற்றி பெறுவோம்” என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.
மதுரை மாநாடு: ஒரு பெரிய திருப்பம்!
வரவிருக்கும் மதுரை மாநாடு விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு பிறகு, விஜய்யின் கட்சி ‘டேக் ஆஃப்’ ஆகும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தற்போது விஜய்யின் தலைமையை ஏற்றுக் கொள்ள, அல்லது விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளத் தயங்கும் கட்சிகள் எல்லாம், மதுரை மாநாட்டின் பிரம்மாண்டத்திற்கு பிறகு விஜய்யை நோக்கி வர தொடங்கும் என்று கூறப்படுகிறது.
விஜயின் கொள்கை – திராவிட ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு:
யார் வந்தாலும் வராவிட்டாலும், விஜய் தனது பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரே ஒரு கொள்கைதான்: “திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும், ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும்” என்பதே அது. எனவே, அதிமுகவுடன் சேர வாய்ப்பே இல்லை என்பதில் விஜய் உறுதியாக உள்ளார்.
திமுக இப்போது ஊழல் செய்து ஆட்சி நடத்துகிறது என்றால், அதிமுக ஏற்கனவே ஊழல் ஆட்சி நடத்திய கட்சிதான். எனவே, இந்த இரண்டு கட்சிகளையும் ஒரே தராசில் வைத்துத்தான் விஜய் பார்க்கிறார். பாஜக பக்கம் போவதே இல்லை என்பதும் அவரது உறுதியான முடிவாக இருக்கிறது. ஆகவே, திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளுமே விஜய்க்கு எதிரி கட்சிகள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மற்ற கட்சிகளின் தயக்கம்:
காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியை விட்டு வெளியே வரும் ரிஸ்கை எடுக்குமா என்று தெரியவில்லை. அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தால் அந்தக் கட்சிக்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றன. ஒருவேளை விஜய்யுடன் சேர்ந்த பிறகு அந்த கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி போல் தோல்வியடைந்துவிட்டால், மீண்டும் திமுகவின் கையை ஏந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர்கள் யோசிக்கலாம்.
ஆனால், விஜய்க்கு அப்படிப்பட்ட யோசனைகள் எதுவும் இல்லை. அவர் இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற மனநிலையில் இருக்கிறார். 2026 இல் வெற்றி பெற்றால் முதல்வர், இல்லையென்றால் மீண்டும் சினிமாவுக்கு சென்றுவிடலாம் அல்லது கட்சியை தொடர்ந்து ஆக்டிவாக வைத்திருக்கலாம் என்று அவரது அரசியல் வியூகங்கள் கூறுகின்றன.
2026 – ஒரு கை பார்ப்பார்!
ஆனால் 2026 இல் அவர் ஒரு கை பார்க்காமல் விடமாட்டார் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. தமிழக அரசியல் களத்தில், புதிய பரிமாணத்துடன் தனித்து போட்டியிட தயாராகும் விஜய்யின் இந்த நடவடிக்கை, வரும் சட்டமன்ற தேர்தலை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
