தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைவால் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் நிலையில், தேர்தல் களம் முழுவதையும் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதியின் பிரம்மாண்ட திட்டம்:
ஆளும் கட்சியான திமுகவின் முக்கியத் தேர்தல் பரப்புரைகளை உதயநிதி ஸ்டாலின் முன்னெடுக்க உள்ளார். முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ள, “மற்ற அனைத்து தொகுதிகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று உதயநிதி களத்தில் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது, அவரது அரசியல் ஆளுமையையும், கட்சியில் அவரது முக்கியத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
விஜய் vs உதயநிதி – நேரடி மோதல்:
இதே காலகட்டத்தில், நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் செப்டம்பர் மாதம் முதல் களத்தில் இறங்க உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய்யின் இந்த மோதல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள இரண்டு பிரபலமான இளைஞர்களின் நேரடி மோதலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விஜய்யின் பலம் மற்றும் பலவீனம்:
விஜய்யை பொறுத்தவரை, அவருக்குள்ள மிகப்பெரிய பலம் அவரது “சினிமா ஸ்டார்” அந்தஸ்துதான். இது அவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. திமுக மற்றும் அதிமுக மீது அதிருப்தியில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை பெரும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. குறிப்பாக, பெண்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது. இந்த அம்சங்கள் அவருக்கு சாதகமாக உள்ளன.
ஆனால், அதே நேரத்தில் அவருக்கு வழிகாட்ட அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இல்லை என்பதும், அரசியலுக்கு அவர் புதியவர் என்பதும் விஜய்யின் பலவீனங்களாக பார்க்கப்படுகின்றன. ஒரு புதிய கட்சியை தேர்தல் களத்தில் வழிநடத்த இவை சவாலாக அமையும்.
உதயநிதியின் பலம் மற்றும் பலவீனம்:
உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை, அவருக்கு வழிகாட்ட திமுகவில் பல மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர். 75 வருட பாரம்பரியம் கொண்ட கட்சி என்பதால், திமுகவின் உட்கட்டமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும், தேர்தல் என்று வந்துவிட்டால், திமுகவினர் வெறித்தனமாக வேலை செய்வார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த கட்சியின் கட்டமைக்கப்பட்ட வலிமை உதயநிதிக்கு ஒரு பெரிய பலம்.
ஆனால், அதே நேரத்தில், விஜய்க்கு உள்ள அளவுக்கு ஒரு பரந்த “ஸ்டார் அந்தஸ்து” உதயநிதிக்கு இல்லை என்பது ஒரு பலவீனமாக பார்க்கப்படுகிறது.சினிமா பின்னணி இருந்தாலும், விஜய் அளவுக்கு மக்கள் மத்தியில் ஒரு சினிமா சூப்பர் ஸ்டார் என்ற ஈர்ப்பு அவருக்கு இல்லாதது ஒரு சவாலாக இருக்கும். மேலும் சனாதனத்தை ஒழிப்போம் என்ற அவரது பேச்சு இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் களத்தில் புதிய அத்தியாயம்:
இதுவரை தமிழகத்தில் இரண்டு பிரபலமான இளைஞர்கள் நேருக்கு நேராக அரசியல் களத்தில் மோதாத நிலையில், உதயநிதி மற்றும் விஜய்யின் இந்த நேரடி போட்டி தமிழக தேர்தல் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும். யாருக்கு வெற்றி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
