2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அரசியல் களம், இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தமிழருவி மணியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறிய சில கருத்துக்களை பார்ப்போம்.
எடப்பாடி பழனிசாமி தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைப்பேன், கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்கிறார். இது எந்த புள்ளியை நோக்கி நகரும் என்று கேட்டபோது, ஒரு புள்ளியிலும் நகராது” என்று தமிழருவி மணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியே வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆசைப்படுவதாகவும், அதேவேளையில் அதிமுக-பாஜக கூட்டணி நிலைக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் ஆசைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “அவரவர் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள், ஆசை மட்டுமே உண்மையாகி விடாது” என்பதே தமிழருவி மணியனின் பார்வையாகும்.
தவெகவின் வருகையும் கூட்டணி சாத்தியங்களும்:
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அதன் நகர்வுகள் உற்றுநோக்கப்படுகின்றன. அதிமுகவை தவெக அதிகமாக விமர்சனம் செய்யாதது போலவே, காங்கிரஸ் கட்சியையும் அதிகம் விமர்சிப்பதில்லை. இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தவெகவை அதிகமாக விமர்சிப்பதில்லை. எனவே, காங்கிரஸ், தவெக, விசிக ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு புதிய கூட்டணி அமைப்பதற்கும் வாய்ப்புள்ளது என்று தமிழருவி மணியன் கணித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி: அசைக்க முடியாததா?
அதிமுகவுடன் நடிகர் விஜய்யின் தவெக கூட்டணி சேர வேண்டும் என்றால், பாஜகவில் இருந்து அதிமுக விலகி வர வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக பேசப்படுகிறது. ஆனால், அப்படி விலகி வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று தமிழருவி மணியன் கூறுகிறார். “அமித்ஷாவின் பிடியிலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியே வரக்கூடியது அல்ல அதிமுக” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக-பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி என்றும், இந்த கூட்டணியில் பாமக கண்டிப்பாக சேரும் என்றும், பாமகவின் உள் பிரச்சினைகள் அனைத்தும் ‘பூம்புகார் மகளிர் மாநாட்டில்’ முடிந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் நலனுக்கான அரசியல் vs பண அரசியல்:
“மக்கள் நலனுக்காகத்தானே அரசியல் கட்சி நடத்துகிறீர்கள்? மக்கள் நலனுக்கு எதிரான ஒரு ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும்போது, ஏன் ஒரே அணியில் சேர மாட்டேன் என்கிறார்கள்?” என்ற கேள்வியை விஜய், எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோருக்கு தமிழருவி மணியன் முன்வைத்தார்.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி:
“மோடிக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒரு குழு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தமிழருவி மணியன் தெரிவித்தார். அண்ணாமலையின் முயற்சியால், கடந்த தேர்தல்களில் பாஜக கூட்டணிக்கு 18% வாக்குகள் கிடைத்தது என்றும், மோடிக்கு வாக்களிக்கவும் தமிழகத்தில் பலர் தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறினார். “தமிழகத்தில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பாஜக வளர தொடங்கிவிட்டது. நீண்ட காலம் ‘மோடி எதிர்ப்பு’ என்ற ஒன்றையே காட்டி உங்கள் அத்தனை பாவக்கறைகளையும் நீங்கள் மூடிவிட முடியாது” என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், “மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வருவார்கள் என்ற நிலை எதுவரையில் இருக்கிறதா, அதுவரையில் அவர்கள் பணத்தை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். 5000 கோடி கொடுத்து ஆட்சியை கைப்பற்றி, இன்னும் சில கோடிகளைத்தான் ஊழல் செய்ய நினைப்பார்கள். இது மாற வேண்டும்” என்றும் தமிழருவி மணியன் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
