அஜித்குமாரின் ஒரு மரணத்திற்கு மட்டும் சாரி கேட்டால் போதாது. ஏற்கனவே கஸ்டடியில் இறந்த 24 நபர்களின் குடும்பத்தினரிடமும் முதல்வர் ஸ்டாலின் சாரி கேட்க வேண்டும்” என்று விஜய் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூறினார். இது குறித்து தி.மு.க.வினர் விமர்சனம் செய்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பத்திரிகையாளர் மணி, “மூளை வளர்ச்சி இல்லாத தி.மு.க தூக்கி எறியும் எலும்பு துண்டுகளுக்காக வாழ்ந்து வருபவர்கள் தான் இப்படிப்பட்ட கேள்வியை கேட்பார்கள்” என்று ஆவேசமாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“ஒரு ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்த ஒரு கட்சி, ஒன்றரை வருடம் மட்டுமே ஆளும் கட்சியை சமப்படுத்தி பேசுவது என்பது அறிவில்லாதவர்கள் பேசும் பேச்சு” என்றும் அவர் இன்னொரு கேள்விக்குப் பதில் அளித்தார். “உத்தரப்பிரதேசத்தில் 500 பேர் செத்துவிட்டார்கள், நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள்?” என அஜித் குமார் மரணம் குறித்து கேள்வி கேட்பவர்களிடம் தி.மு.க.வினர் கூறுகின்றனர். “இப்படிப்பட்ட அறிவாளிகள் இருக்கும் நாடு தான் தமிழ்நாடு’ என்றும் மணி கூறினார்.
“விஜய் கேட்பது ஒரு நியாயமான கேள்வி. ஒரே ஒரு கஸ்டோடியல் டெத்துக்கு சாரி கேட்ட முதலமைச்சர், மற்ற 24 கஸ்டோடியல் டெத்துக்கும் சாரி கேளுங்கள் என்று சொல்வது தர்க்க ரீதியான ஒரு நியாயமான கேள்வி. “கஸ்டோடியல் டெத்தை தடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள்?” என்று விஜய் கேட்பது, அடுத்த ஆட்சிக்கு வர இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் அவர் கேட்பது நியாயமான கோரிக்கை. அதை யாரும் குறைத்து மதிப்பிடவோ, குறை சொல்லவோ முடியாது என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
நியாயமாகப் பார்த்தால், எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.தான் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை வரவழைத்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்போம் என்று போராடி இருக்க வேண்டும். ஸ்டாலின் அஜித்குமார் வீட்டாரிடம் போன் பேசியதைக் கிண்டல் செய்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த நாளே அவரும் போன் செய்கிறார். விஜய் நேரில் சென்று அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னாரே, அதேபோல் ஏன் எடப்பாடி செல்லவில்லை என்றும் பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பினார்.
சாத்தான்குளம் நடந்த தந்தை மகன் கஸ்டோடியல் டெத் குறித்து ஆவேசமாக அரசியல் செய்த தி.மு.க.வால், அஜித் குமார் மரணம் குறித்து பதில் சொல்ல முடியவில்லை என்று விஜய் கேட்பது நியாயமான கேள்விதான். 24 பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் மேடையில் ஏற்றி, அவர்களுக்காக நியாயம் கேட்கப் பேசியது என்பது விஜய் செய்யும் நியாயமான அரசியல், பாராட்டுக்குரியது என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
அஜித்குமார் மரணம் குறித்த வழக்கில், தமிழக வெற்றி கழகத்தின் கோரிக்கை வித்தியாசமான அதே நேரத்தில் நியாயமான கோரிக்கை. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி ஒரு ஸ்பெஷல் குழு அமைத்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும், சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என்றும் கூறியிருந்தார். அதைத் தவிர்க்க முடியாது என்றும் மணி தெரிவித்தார்.
கடந்த ஒன்றரை வருடமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, அதை சரி செய்யவில்லை என்றால் சரி செய்ய வைப்போம் என்று விஜய் கூறுவது நியாயமானது. விஜய் செய்வது ஆரோக்கியமான அரசியல், தனி மனித தாக்குதல் இல்லாமல் நாகரீகமான பேச்சு என்றும், “அரசியல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்றும், “இதே பாதையில் சென்றால் கண்டிப்பாக மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும்” என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
