பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் முக்கியமான அமைப்புகளை குறிவைத்து சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்தியதாக 7 ‘அட்வான்ஸ்ட் பெர்சிஸ்டன்ட் த்ரெட்’ (APT) குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என மகாராஷ்டிரா சைபர் தெரிவித்துள்ளது. இதில் 150 தாக்குதல்கள் மட்டும் வெற்றிகரமாக இருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் ராணுவ சண்டைகளை நிறுத்த ஒப்பந்தம் செய்தபின் கூட, இந்திய அரசின் இணையதளங்கள் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தொடர்ந்து சைபர் தாக்குதல்களை சந்தித்து வருகின்றன என்று கூறப்படுகிறது.
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்திலிருந்து தரவுகள் திருடப்பட்டதாகவும், விமான மற்றும் மாநகர அமைப்புகள் ஹேக் செய்யப்பட்டதாகவும், தேர்தல் ஆணைய இணையதளம் குறிவைக்கப்பட்டது என சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் சொல்லப்படும் போலியானவை என்று மகாராஷ்டிரா சைபரின் முதுநிலை அதிகாரி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறைந்த பிறகும் சைபர் தாக்குதல்கள் முற்றிலும் முடிவடையவில்லை என்றும், இந்த தாக்குதல்கள் பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேஷியா, மொராக்கோ மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தொடர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானுடன் சேர்ந்துள்ள ஹேக்கிங் குழுக்களின் சைபர் போர் விவரிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ராணுவம் நடத்திய அதே பெயரிலான படை நடவடிக்கையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மாநில காவல் துறை தலைவர் மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட முக்கிய சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, இந்த தாக்குதல்கள் பாகிஸ்தான், வங்கதேசம், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தோனேஷியாவிலுள்ள குழுவினரால் நடத்தப்பட்டவை என மகாராஷ்டிரா சைபரின் கூடுதல் போலீஸ் தலைமை இயக்குநர் யஷஸ்வி யாதவ் கூறினார்.
மால்வேர் மூலம் குறிவைக்கும் முயற்சிகள், DDoS தாக்குதல்கள், GPS போலியாக்கம் (spoofing), ஆகியவையும் இதில் பயன்படுத்தப்பட்டன. பல தாக்குதல்களை தடுப்பதில் வெற்றி பெற்றதாகவும், இந்தியாவின் முக்கியமான அமைப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
APT 36 (பாகிஸ்தானைச் சேர்ந்தது)
Pakistan Cyber Force
Team Insane PK
Mysterious Bangladesh
Indo Hacks Sec
Cyber Group HOAX 1337
National Cyber Crew (பாகிஸ்தான் சார்ந்தது)
மேற்கண்ட 7 குழுக்கள் சேர்ந்து சுமார் 15 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவை எதிர்த்து மேற்கொண்டுள்ளன.
இந்த அறிக்கையில் பாகிஸ்தான் சார்ந்த குழுக்களின் “ஹைபிரிட் போர்திட்டி” பற்றியும், அதில் தவறான தகவல்கள் பரப்பும் முயற்சிகள் அடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் வங்கி அமைப்புகள் ஹேக் செய்யப்பட்டன, மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்பவை போலியான தகவல்களாக பரவியுள்ளன.
மேலும் இந்தியா-பாகிஸ்தான் சண்டைகளை மையமாகக் கொண்ட 5,000-க்கும் மேற்பட்ட தவறான தகவல்களையும் போலியான செய்திகளையும் சமூக ஊடகங்களில் கண்டுபிடித்து மகாராஷ்டிரா சைபர் க்ரைம் காவல்துறாஇ நீக்கியுள்ளது.
மொத்தம் 80 தவறான தகவல்களில் 35 நீக்கப்பட்டுள்ளன. மற்ற 45 மீது நடவடிக்கை தொடரும் நிலையில் உள்ளன.
இந்தியாவின் மின் கட்டமைப்பு மீது தாக்குதல், மாநில அளவிலான மின் துண்டிப்புகள், செயற்கைக்கோளை முடக்கு முயற்சிகள், பிரம்மோஸ் ஏவுகணை கிடங்கில் தாக்குதல் நடந்ததாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அவை முற்றில்ம் நீக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம், பரப்ப வேண்டாம் என்றும், நம்பத்தகுந்த மற்றும் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலிருந்து மட்டுமே செய்திகளை உறுதிப்படுத்தவும் என மகாராஷ்டிரா சைபர் க்ரைம் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
