எலான் மாஸ்க் அவர்களின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து தனது சாட்டிலைட் இணையதள சேவையை தொடங்க உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், ஸ்டார்லிங்க் இந்தியாவுக்கு வந்தால் எந்த அளவு கட்டணம் இருக்கும் என்று பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஸ்டார்லிங்க் சேவையின் கட்டணம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால், அதற்காக யாரும் முன் வரமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மாதக் கட்டணம் ரூ.800 முதல் ரூ.41,000 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒருமுறை செலுத்த வேண்டிய ஹார்டுவேர் கட்டணம் ரூ.20,000 வரை இருக்கும். எனவே, இத்தனை அதிகமான கட்டணத்தை கொடுத்து ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணையதள சேவையை யாராவது வாங்குவார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைந்த விலையில் செல்போன் ரீசார்ஜ் மற்றும் இணைய சேவைகளை வழங்கி வரும் நிலையில், ஸ்டார்லிங்க் இவ்வளவு அதிகமான கட்டணத்தை நிர்ணயித்தால், அதை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை. கோடீஸ்வரர்கள் இந்த கட்டணத்தை செலுத்த முடியும், ஆனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஸ்டார்லிங்க் சேவை அணுக முடியாததாக இருக்கும்.
ஆனால், இந்தியாவில் உள்ள போட்டியை அறிந்து, எலான் மஸ்க் கட்டணத்தை குறைப்பாரா? இந்தியர்களை கவரும் வகையில் பிளான்களை மாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதே!