திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, வழக்கறிஞர் வில்சன், தொமுச சண்முகம், புதுப்பேட்டை எம். எம். அப்துல்லா மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஒரு ராஜ்யசபா எம்பி தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. திமுகவுக்கு 159 எம்எல்ஏக்கள் இருப்பதால், நான்கு எம்பி சீட்டுகளை பெறுவதில் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது.
இவற்றில், வில்சன் மற்றும் அப்துல்லா மீண்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதி. வைகோவின் சீட்டை, கமல்ஹாசனுக்கு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு இருப்பதாக தகவல் உள்ளது. மேலும் தொமுச கட்சிக்கே இன்னொரு சீட் வழங்க திமுக தலைவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், மூன்று எம்பி சீட்டுகள் திமுக தரப்பில் உறுதியாகிவிட்ட நிலையில், நான்காவது நபர் கமல்ஹாசனா, வைகோவா என்பதுதான் தற்போது எதிர்பார்க்கப்பட வேண்டிய முடிவு.
அதிமுக தரப்பில், 66 எம்எல்ஏக்கள் இருந்தபோதும், ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகிய நால்வரும் அதிமுகவிலிருந்து விலகிவிட்டதால், எஞ்சியுள்ள 62 எம்எல்ஏக்களின் ஆதரவுடன், ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை மட்டுமே பெற முடியும்.
ஒருவேளை, ஓ.பி.எஸ். அணியில் உள்ளவர்களும், அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்த பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தால் மட்டுமே இன்னொரு எம்பி சீட்டை அதிமுக தரப்பில் இருந்து பெறலாம். ஆனால், பாஜக மற்றும் பாமக ஆதரவு வழங்குவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பாமக தரப்பிலிருந்து அன்புமணிக்கு சீட்டு கொடுத்தால், பாமக எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைக்கும். ஆனால், பாஜகவிடம் இருந்து எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றால், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதை எடப்பாடி பழனிச்சாமி விரும்ப மாட்டார் என்பதால், ஒரு எம்பி தொகுதி வீணாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.