பிக் பாஸ் வீடு என வரும் போது நிச்சயம் நண்பர்களாக இருவரால் இருக்க முடியுமா என கேட்டால் சந்தேகம் தான். போட்டி என வரும் போது நட்பு என பார்த்துக் கொண்டிருந்தால் அது வேறு பிரச்சனைகளை உருவாக்கலாம். இதற்கு மத்தியில், ஜாக்குலின் மற்றும் சவுந்தர்யா ஆகிய இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வந்தனர். ஆனால், சவுந்தர்யாவோ ஜாக்குலின் குறைகளை மற்ற போட்டியாளர்களிடம் பேசியிருந்தார்.
இதை அறிந்து ஜாக்குலின் வருத்தப்பட, Freeze டாஸ்கில் வந்த சவுந்தர்யாவின் தாயார், நட்பாக இருக்கும்படியும் எதுவாக இருந்தாலும் ஜாக்குலினிடமே கூறிவிடு என்றும் மகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். ஆனாலும், சவுந்தர்யா தொடர்ந்து ஜாக்குலின் பற்றி முதுகுக்கு பின்னால் பேசுகிறார். சமீபத்தில் இது தொடர்பாக ஒரு சண்டை வெடித்திருந்தது.
ஜாக்குலின் – சவுந்தர்யா சண்டை
அப்படி ஒரு சூழலில் தான் சவுந்தர்யா மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவரும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை பற்றி சமீபத்தில் அமர்ந்து பேசுகின்றனர். இது பற்றி பேசும் சவுந்தர்யா, “தோழி என நீ கூறும்போது வெளியே எப்படி உன் நண்பர்களை பார்க்கிறாயோ அப்படி நீ பார்க்கிறாய். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் உன்னிடம் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. இந்த வீட்டிற்குள் நீ ஒரு சக போட்டியாளர் என்னும் போது நண்பா எனக் கூறிவிட்டு உன்னை ஏதும் பேசாமல் இருக்க முடியாது. எதுவாக இருந்தாலும் இங்கே வெளிப்படையாக தான் பேச முடியும்.
நான் உன்னை ஏதாவது சொல்லிவிட்டு பின்னர் உன்னை ஆறுதல்படுத்த வேண்டும் என்று இருந்தால் நிச்சயம் என்னால் முடியாது. நான் ஒன்று சொல்லி நீ அழுது கொண்டிருந்தாய். அது எனது மனதிலும் அதிகமாக உறுத்தி கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட சமயத்தில் குழப்பமாக இருப்பதுடன் என்ன சொல்வது, எப்படி ரியாக்ட் செய்வது என்பது எனக்கு தெரியவில்லை” என சௌந்தர்யா கூறுகிறார்.
மனசு கஷ்டமா இருக்கும்
இதன் பின்னர் பேசும் ஜாக்குலின், “நான் என்றைக்குமே எனது தோழியாக நீ இரு என்று நான் கூறியது இல்லை. நீ என்ன சொன்னாலும் அதற்கேற்ப தான் நான் இருந்துள்ளேன். ஆனால் என்னை பற்றி எனது குறைகளை பற்றி என்னிடம் பேசாமல் மற்றவரிடம் பேசுவதை நான் அறியும் போது எனக்கு வேதனையாக உள்ளது” என கூறுகிறார்.
இதை தொடர்ந்து இருவரும் தாங்கள் அடிக்கடி சண்டை போடுவது பற்றி பல விளக்கங்களை கொடுக்க அது பற்றி பேசும் சௌந்தர்யா, ‘நான் எதுவும் செய்யாமல் என் மீது யாராவது குற்றம் சுமத்தினால் அவர்களிடம் முகத்திற்கு நேராக பேசி விடுவேன் என்பதால் என்னை அவர்கள் சொல்லும் வார்த்தைகள் பாதிக்காது’ என்று கூறுகிறார். ஆனால் தன் மீது யாராவது குற்றம் சொன்னாலே வேதனையாக இருக்கும் என ஜாக்குலின் கூறுகிறார்.
இப்படி பல நாட்களாக ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா ஆகியோருக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அவர்கள் தற்போது பேசி உள்ளதால் நிச்சயம் இனிவரும் நாட்களில் மிக நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள் என்றும் தெரிகிறது.