நடிகர் அஜித்குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தல என்ற ஒரு பட்டப்பெயர் இருந்தது. தற்போது தனது ரசிகர்கள் இந்த பெயரை குறிப்பிட வேண்டாம் என்று அவர் சொன்னதன் பிறகு சமூக வலைத்தளங்களில் அரிதாகவே பலரும் தல என அழைத்து வருகிறார்கள். இதனிடையே, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதல் படமாக உருவான தீனாவில் தான் தல என முதலில் அழைக்கப்பட்டது.
தற்போது சல்மான் கானின் சிக்கந்தர் மற்றும் சிவ கார்த்திகேயனுடன் புதிய திரைப்படம் என பிஸியாக இருந்து வரும் முருகதாஸ், அஜித், விஜய், ரஜினி, சூர்யா, அமீர்கான், மகேஷ் பாபு என இந்தியாவின் பல சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில், அவரது முதல் திரைப்படமே அஜித்துடன் அமைந்திருந்தது. தீனாவில் சுரேஷ் கோபி, லைலா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
வாலி எழுதிய வரிகள்
அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ரமணா தொடங்கி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள முருகதாஸ், தீனா திரைப்படத்தில் வாலி ஒரு பாடல் எழுதிய சமயத்தில் அவருடன் நடந்த உரையாடல் தொடர்பான செய்தி அதிக கவனம் பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் வரும் வத்திக்குச்சி பத்திக்காதுடா என்ற பாடலை வாலி எழுதியிருந்தார். அந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றி அவரே முன்பு ஒரு நேர்காணலில் பேசியிருந்ததன் படி, “பாடல் எழுத சொல்லி பத்து நாட்கள் கழித்து நான் தயாராகிவிட்டது என ஏ. ஆர். முருகதாஸை அழைத்தேன்.
அவரும் வந்து சேர்ந்தார். ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரச வரையில்ல’ என அதன் வரிகளை நான் பாடிக் காட்டினேன். அதை கவனித்துக் கொண்டே இருந்த ஏ. ஆர். முருகதாஸ் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்தார். நானும் இரண்டு நிமிடங்கள் பொறுமையாக இருந்து விட்டு, ‘ஐயோ இதுக்காக தான் புது இயக்குனர்களுடன் நான் பாடல்களை எழுதுவதே கிடையாது. நல்லா இருக்குன்னா நல்லா இருக்குன்னு சொல்லு. நல்லா இல்லனா வேற எழுதி தரப் போறேன். இது என்ன பைபிளா?. வரிகளை மாற்றவே கூடாதுன்னு சொல்றதுக்கு.
வத்திக்குச்சி பத்திக்காதுடா
செத்தவங்க கையில வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கே’ என்று கேட்டேன். அப்போது என்னை வியந்து பார்த்த முருகதாஸ், ‘படம் முழுக்க அஜித்குமார் கையில் ஒரு வத்திக்குச்சி வைத்து வாயில் குத்தி கொண்டே வருவார். அது எப்படி உங்களுக்கு தெரிந்தது’ என வியப்புடன் கேட்டார்.
நான் எதேட்சையாக பாடல் வரிகளை எழுதியது அந்த திரைப்படத்திற்கும் சரியாக பொருந்தி போய்விட்டது” என வாலி தெரிவித்துள்ளார்.