பிக் பாஸ் வீட்டில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களின் வீட்டிலிருந்து வருபவர்கள் தொடர்பான நிறைய எமோஷனலான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. என்னதான் தங்களது குடும்பத்தினரை பிரிந்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தாலும் அவர்களிடம் பேசுவதற்கான வாய்ப்புகள் கூட கிடைக்காமல் இருப்பது என்பது நிச்சயம் ஒரு ஏக்கமான விஷயம் தான்.
அப்படி இருக்கும் போது நாம் எதிர்பாராத நேரத்தில் நமது குடும்பத்தில் இருந்து சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தால் எப்படி இருக்கும்?. அப்படி ஒரு பேரானந்தத்தை தான் அங்கிருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தற்போது உணர்ந்து வருகின்றனர்.
Freeze Task ஆரம்பம்
Freeze task ஆரம்பமான முதல் நாளில் தீபக், மஞ்சரி, ரயான் மற்றும் விஷால் ஆகியோரின் வீட்டிலிருந்து பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். இதில் சிலர் முழுக்க முழுக்க எமோஷனலாக நிறைய விஷயங்களை பேசி இருந்தாலும் இன்னொரு புறம் விஜே விஷாலின் தந்தை, தீபக்கின் மனைவி, மஞ்சரியின் சகோதரி ஆகியோர் சொல்லிய சில விஷயங்கள் அனைவரது மத்தியில் ஒருவித சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் என்ன தான் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்தாலும் பிக் பாஸ் முக்கியமான ஒரு விஷயத்தையும் அவர்களிடம் கோரிக்கையாக வைத்திருந்தார். அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் ஏதாவது போட்டியாளர்கள் மீது முரண்பாடு இருந்தால் அதை வெளிப்படையாக தெரிவிக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.
கண்ணீர் விட்ட அருண் பிரசாத்
அப்போது முதல் நாளில் வந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவருமே அதிகம் அருண் பிரசாத் பற்றி தான் குறைகளை குறிப்பிட்டு இருந்தனர். இதனை ஒரு பக்கம் அவர் வேடிக்கையாக எடுத்தாலும் இன்னொரு பக்கம் அதிகம் மனம் உடைந்து போனதாகவே தெரிகிறது. ஒரு சில இடங்களில் தன்னை மட்டுமே ஏன் சொல்கிறார்கள் என்றும் கண்ணீர் வடித்திருந்தார் அருண் பிரசாத்.
அந்த சமயத்தில் அருண் பிரசாத் அதிகம் விமர்சித்த ஒரு போட்டியாளரான முத்துக்குமரன் மறைமுகமாக அவருக்கு கொடுத்த ஆறுதல் தொடர்பான விஷயம், ரசிகர்களை சற்று கலங்கவும் வைத்துள்ளது. “இது பொதுவான ஒரு பார்வையாளர்களின் கருத்தா என்று கேட்டால் கிடையாது. தீபக்குடைய குடும்பத்திலிருந்து எப்படி பார்க்கிறார்கள். அவருடைய குடும்பத்திலிருந்து எப்படி பார்க்கிறார்கள் என்பது தான்.
ஆறுதல் சொன்ன முத்து
இப்போது எனது குடும்பத்தில் இருந்து வருபவர்கள் விஷாலிடம், ‘ஏம்பா என் புள்ளைகிட்ட இப்படி செஞ்சிட்டே?’ எனக் கேட்பார்கள். அதாவது நானே அந்த விஷயத்தில் தப்பு செய்திருக்கலாம். ஆனால் எனது அம்மாவுக்கு அவரது பிள்ளை தானே பெரிது” எனக்கூறியதும் அருண் பிரசாத்தின் மீது தப்பு இல்லை என்பதையும் அவர் மறைமுகமாக எடுத்துரைக்கிறார்.
இதனை ஒரு பக்கம் அருண் பிரசாத்தும் யோசனையில் கேட்டுக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.