மார்கழி மாதத்தின் 5ம் நாள் பதிவு. மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலில் ‘மாலறியா நான்முகனும்’ என்று எழுதியுள்ளார். இந்தப் பாடலில் ‘மாலும், அயனும் தேடிக் காணொண்ணாத மூர்த்தி’ தான் சிவபெருமான். இவர் தான் திருவண்ணாமலையில் ஜோதி சொரூபமாக நிற்கிறார். அவரை நாம் அருளால்தான் நெருங்க முடியும். உள்ளம் உருகி அவரிடம் சரணாகதி அடைந்தால் மட்டுமே அவரை நாம் நெருங்க முடியும். இல்லாவிட்டால் மாலுக்கும், அயனுக்கும் ஏற்பட்ட கதிதான்.
எப்போதும் வாயால் சிவ சிந்தனை, சிவனே சிவனே என்பேன் என்று சொன்னால் போதாது. உணர்ந்து மந்திரமாக நாம் ஜெபிக்கணும். அப்படிச் செய்தால்தான் இறைவன் அருள் என்ற பரிசை நமக்குத் தருவார். சிந்தனையை எங்கோ வச்சிக்கிட்டு ‘சிவசிவா சிவசிவா’ன்னு சொன்னால் அதில் பலன் இல்லை என்பதைத் தான் இங்கு மாணிக்கவாசகர் சுட்டிக்காட்டுகிறார்.
மனம், மொழி, மெய் இவை மூன்றையும் ஒருமித்தக் கருத்தாகக் கொண்டு சொல்ல வேண்டும். இன்று திருவெம்பாவையில் ஆண்டாள் ‘மாயனை மன்னு வடமதுரை’ என்ற பாடலில் தொடங்குகிறார். இந்தப் பாடலில் மாயனாக விளங்கும் கண்ணனின் லீலைகளைப் பற்றி விளங்குகிறார். அவரின் அருள்பரிபூரணமாகக் கிடைக்க வேண்டும் என்றால் பெண்கள் எல்லாரும் எழுந்து வந்து தூய மனதோடு சரணாகதி அடைய வேண்டும். அப்படி அடைந்தால் நமக்குத் தீவினைகள் அண்டாது.
அவை எல்லாம் தீயினில் தூசாக மாறிவிடும். பழவினைகள் எவையாக இருந்தாலும் அதை எரித்து சாம்பலாக்குற ஆற்றல் இவரிடம் உள்ளது. அதனால் தூங்காமல் எழுந்து வந்து அவரைத் தொழ வேண்டும். நாம் பல பிறவிகளாக மாயத்தூக்கத்தில் இருக்கிறோம். அதில் இருந்து எழுப்பத் தான் ஆண்டாள் நாச்சியாரும், மாணிக்கவாசகரும் இதுபோன்ற பாடல்களைப் பாடுகிறார்கள்.
எத்தனையோ லீலைகள் செய்தவன்தான் கண்ணன். அவனை நாம் சரணாகதி அடைந்து தொழுவோம்.
அக்னிசட்டி எடுப்பது, அலகு குத்துவது, பறவை காவடி எடுப்பது என இது போல கஷ்டமான உடலை வருத்தும் வழிபாடுகள் அவசியமா? அதை ஏன் செய்யணும்னு எல்லாருக்கும் ஒரு கேள்வி எழும். இறைவன் எப்போதும் என்னைக் கஷ்டப்பட்டுக் கும்பிடுன்னு சொன்னதில்லை. அவர் ரொம்ப எளிமையானவர். அவரை நாம் எளிமையாகவே வழிபடலாம்.
துன்பம் ஒரு பக்கத்தில் உச்சத்திற்குப் போகுது என்றால் அவர்களுக்கு தெய்வத்தின்மீது இருக்கும் நம்பிக்கை ஒரு பக்கம் ஒண்ணுமே இல்லாமல் போகும். இன்னொரு பக்கம் தாங்க முடியாத துன்பத்தில் இருந்து என்னைக் காப்பாற்றினால் நான் பறவைக் காவடி எடுக்கிறேன். அலகு குத்திக்கிறேன்னு வேண்டுவார்கள்.
துன்பத்தின் உச்சத்தில் அவர் இருக்கும்போது அவர் கடவுளிடம்தான் போய் நிற்க முடியும். அவர் கடவுளிடம் அந்த விஷயத்தை சொல்லி நேர்த்திக்கடனையும் சொல்லி வேண்டுகிறார். ஒண்ணு கடன். அதைப் போன்ற கஷ்டம் கிடையாது. கொடுக்கணும்னு நினைக்கிறார். ஆனால் அவரிடம் பணம் இல்லை. கடன் கொடுத்தவர் சும்மா விடுவாரா?
அவரின் ஏளனப்பேச்சைக் கேட்டு கேட்டு நான் உனக்குப் பறவைக்காவடியை எடுக்கிறேன். அந்த வலி எனக்குப் பெரிசு கிடையாது. இதுதான் பெரிசு. இந்த வலியைப் போக்கு என வேண்டுகிறார். அதே போல பெண்களுக்குக் குழந்தை இல்லை என்ற பிரச்சனை வருகிறது. ‘மலடி’ என்ற அந்த வார்த்தையைக் கேட்டுட்டு அந்தப் பெண்ணால் நிம்மதியாகத் தூங்க முடியுமா?
எல்லாரும் பேசும் அந்த வார்த்தை நெருப்பில் வெந்த மாதிரி இருக்கும். அதனால் அக்னி சட்டியை நான் ஏந்துகிறேன். எனக்கு ஒரு குழந்தையைக் கொடுன்னு இறைவனை வேண்டுகிறார்கள். அதனால்தான் இது போன்ற உடலை வருத்தும் விரதங்களை மேற்கொள்கிறார்கள். இது நம்பிக்கையோடு நீண்ட காலமாக செய்து வருகிறார்கள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.