சென்னை: நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள ஒரு அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாகவும், இதனால் புதுச்சேரி அமைச்சர்களும் அரசு அதிகாரிகள் ஆடிப்போனதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வேகமாக வைரலாகின. இந்த சம்பவத்துக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.
போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், படங்கள் தயாரிப்பதை தாண்டி, வேறு பிசினஸ்களையும் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு சென்றார். நேராக புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்ற விக்னேஷ் சிவன், புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து பேசினார்.
அப்போது விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ‘சீகல்ஸ்’ ஓட்டலை விலைக்கு (அரசுக்கு சொந்தமான ) கிடைக்குமா என்று பேசியதாக தகவல்கள் வெளியானது. இதனை கேட்ட அமைச்சர் லட்சுமி நாராயணன் விக்னேஷ்… அது அரசு சொத்து என்று கூறினாராம். உடனே இயக்குனர் விக்னேஷ் சிவன், சீகல்ஸ் ஓட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா? என கேட்டதாக தகவல்கள் வெளியானது.
அதற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன், ‘புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சீகல்ஸ் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருகிறார். எனவே அதனை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது’ என்று மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியானது.
புதுச்சேரி அரசு ஓட்டலை விலை விக்னேஷ் சிவன்விலைக்கு கேட்கவில்லை என்று மறுத்துள்ளார். நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நான் தற்போது இயக்கி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரி விமான நிலையத்தில் நடத்த திட்டமிட்டு எனவே அதற்கான உரிய அனுமதி பெறுவதற்காக புதுச்சேரிக்கு நான் சென்றேன். அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சரையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் மரியாதை நிமித்தமாக நான் சந்தித்து விட்டு வந்தேன்.
நான் அவர்களை சந்தித்து விட்டு வந்த பின்பு என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர் அவர்களை சந்தித்து சில விஷயங்கள் குறித்து கேட்டுள்ளார். அந்த விஷயங்கள் எனக்காக கேட்கப்பட்டதாக தவறுதலாக புரிந்து கொண்டு அதனை பரப்பி விட்டார்கள்.
அரசு ஓட்டலை நான் விலை பேசியதாக மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன இது ரசிக்கும்படியாக இருந்தாலும் இதில் எந்தவித உண்மையும் இல்லை. மேலும் இது போன்ற மீம்ஸ்கள் தேவையில்லாதது என்று நினைக்கிறேன். எனவேதான் இந்த விவகாரத்தில் எனது விளக்கத்தை தெரிவிக்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.