பொதுவாக நடிகர்கள் அல்லது நடிகைகள் என வரும் போது அவர்களை திரையில் பார்த்து அதிக அனுபவமுள்ள நமக்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது நிச்சயம் மிகப்பெரிய மர்மமாக தான் இருக்கும். நம்மை போல தான் வாழ்வார்களா அல்லது அவர்களின் வாழ்க்கை முறை வித்தியாசமாக இருக்குமா, குடும்பத்தினருடன் எப்படி பேசிக் கொள்வார்கள் என பல கேள்விகள் நிச்சயம் மனதில் எழாமல் இருக்காது.
இதற்கு மத்தியில், சினிமா துறையில் பிரபலமாக இருப்பவர்களே திருமணம் செய்து கொள்ளும் போது அதில் அவர்களது ஈடுபாடு எப்படி இருக்கும் என ரசிகர்களே புதிர் போட தொடங்கி விடுவார்கள். இப்படி பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தவறு என்றாலும் அதில் என்ன தான் நடந்திருக்கும் என்பதை அறியும் ஆர்வம், பல ரசிகர்களுக்கு எழாமல் இல்லை.
கோலிவுட்டில் தொடரும் விவாகரத்து..
அப்படி ஒரு சூழலில் தான் இந்த ஆண்டு கோலிவுட்டில் நடந்த சில அதிர்ச்சியான சம்பவங்கள் அனைவரையும் தலை சுற்ற வைத்திருந்தது. தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடியாக வலம் வந்த ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியினர், திடீரெனெ தங்களது விவாகரத்து தொடர்பாக பகிர்ந்த அறிக்கை, பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
நேர்காணல்களில் கூட அந்த அளவுக்கு தங்கள் காதலின் உன்னதமான உணர்வை எடுத்துரைத்திருந்த ஜெயம் ரவி – ஆர்த்தி ஜோடியின் பிரிவு தொடர்பாக நிறைய அதிர்ச்சி தகவல்களும் வெளியானது. இவர்களை போல, காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜி.வி. பிரகாஷ் குமார் – சைந்தவி ஜோடியும் திடீரென பிரிய போவதாக அறிவித்திருந்தனர்.
இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் கோலிவுட் வட்டாரத்தில் அரங்கேறி கொண்டிருக்க, 29 ஆண்டுகள் இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் – சாய்ரா பானு ஆகியோரும் சில தனிப்பட்ட காரணங்களால் விவாகரத்து செய்ய போவதாக அறிவித்திருந்தனர். பார்ப்பதற்க்கே அட்டகாசமான ஜோடியாக இருந்த அவர்கள், இப்படி ஒரு முடிவை அதுவும் 29 ஆண்டுகள் கழித்து எடுத்தது ஏன் என்று பலருக்கும் புரியவில்லை.
மனைவியை பிரிந்த சீனு ராமசாமி
இந்த நிலையில் தான், தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான சீனு ராமசாமியும் அவரது மனைவி தர்ஷனாவும் 17 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய உள்ளதாக முடிவு எடுத்துள்ளனர். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில், சீனு ராமசாமி பகிர்ந்த பதிவில், “நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம். அன்புடன் சீனு ராமசாமி” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு கோலிவுட் வட்டாரத்தில் அரங்கேறிய விவாகரத்துக்கு மத்தியில் சீனு ராமசாமி எடுத்த முடிவும் அதிக விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.