துவாரகையில் ருக்மணி தேவி கிருஷ்ணனுடன் இருந்து வரும்போது ஒரு நாள் அவளுக்கு கிருஷ்ணனின் சிறு வயதில் அவர் எவ்வாறு இருந்தார் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை தோன்றியது. உடனே விஸ்வகர்மாவை அழைத்து எனக்கு பால கிருஷ்ணன் எப்படி இருந்தான் என்று அறிய ஆவல் உள்ளது என்றார்.
பால கிருஷ்ண விக்ரகம்
உடனே விஸ்வகர்மா குட்டி கிருஷ்ண விக்ரகம் செய்து அதில் ஒரு கையில் மத்தும் (தயிர் கடையும் மத்து) மற்றொரு கையில் வெண்ணெயும் (வலது கையில் மத்தும் இடது கையில் வெண்ணெயும்) வைத்திருப்பது போல அழகிய பால கிருஷ்ண விக்ரகம் செய்து கொடுத்தார். ருக்மணி மிகவும் மகிழ்ந்து தினமும் அதை பூஜித்து வந்தாள்.
அதற்கு பிறகு அந்த விக்ரகத்தை அர்ஜுனன் பூஜித்து வந்தான். அவனுக்கு பிறகு யாரும் பூஜிக்கவில்லை என்பதால் அந்த விக்ரகத்தை ஒரு கோபி சந்தனத்தில் வைத்து பத்திரப்படுத்தி வைத்தனர். ஆனால் துவாரகை கடலில் மூழ்கியதால் இந்த விக்ரகமும் மூழ்கியது.
இது இவ்வாறு இருக்க காற்றும் மழையும் கடல் அரிப்பும் கொந்தளிப்பும் அடிக்கடி உண்டானதால் அந்த விக்ரகம் கோபி சந்தனத்தில் செய்யப்பட்டு இருப்பதாலும் அது கடலுக்கு மேலேயே மிதந்தது. ஒரு நாள் வணிகர்கள் கப்பல் ஒன்று வரும் போது ஒருவர் அந்த கோபி சந்தனத்தை எடுத்து கப்பலில் உள்ள தங்கம், வைரம், வைடூரியத்துடன் சேர்த்து வைத்தார்.
சூறாவளி
அந்த கப்பல் புறப்பட்டு தெற்கு நோக்கி வரும் போது பயங்கர சூறாவளி வீசிக்கொண்டு இருந்தது. அந்தக் கப்பலில் உள்ளவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கும் போது தூரத்தில் ஒரு சந்நியாசி அமர்ந்து இருப்பதைப் பார்த்து அவரை இங்கு இருந்தே வணங்கினர்.
உடனே அவர் கையை அசைத்து சில மந்திரங்களை ஓதி காற்றையும் மழையையும் சூறாவளியையும் நிறுத்தினார். அவர் வேறு யாரும் அல்ல. அவர் தான் மத்வ மதத்தை ஸ்தாபித்த மத்வாச்சாரியார். அவரின் இயற்பெயர் வாசுதேவன்.
கோபி சந்தனம்
கப்பலில் உள்ளவர்கள் குருவின் சைகையால் மழை நின்றதைப் பார்த்து மகிழ்ந்து கரை அருகில் வந்து வணங்கினர். அவர்கள் சேர்த்து வைத்திருந்த பொன் குவியலைக் காட்டி ‘தங்களுக்கு எவ்வளவு பொன் வைரம் வைடூரியம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினர்.
ஆனால் அவர் ‘எனக்கு ஒன்றும் வேண்டாம் இந்த கோபி சந்தனம் மட்டும் போதும்’ என்று கூறி அதை மட்டும் எடுத்துக் கொண்டார். பின் அதை நன்கு சுத்தம் செய்து அதனுள் இருந்த கிருஷ்ண விக்ரகத்தை மட்டும் எடுத்து ஸ்தாபித்தார்
பெயர்க் காரணம்
‘உடு’ என்றால் நட்சத்திரம் பா என்றால் தலைவர். ‘உடுபா’ என்றால் ‘நட்சத்திரங்களின் தலைவன்’ அதுவே நாளடைவில் மருவி ‘உடுப்பி’ ஆயிற்று. அதாவது சந்திரனுக்கு 27 மனைவியர் அதில் முதல் மனைவி பெயர் ரோஹிணி அவள் மேல் மட்டும் சந்திரனுக்கு அலாதி பிரியம்.
அது மற்றவர்களுக்கு பொறாமையாக இருந்தது. உடனே அது பற்றி தன் தந்தையான தஷ்சப் பிரஜாபதியிடம் புகார் செய்தனர். அதைக் கேட்ட தஷ்சப் பிரஜாபதி அவனுக்கு ‘இன்று முதல் நீ தேய்ந்து போவாய்’ என்று சாபம் கெடுத்தார் .
அந்த சாபத்தை நீக்குவதற்காக அவன் உடுப்பி வந்து கிருஷ்ணரை வழிபட விமோசனம் கிடைத்தது. நட்சத்திரங்களின் தலைவன் சந்திரன் வழிபட்டதாலும் அவருக்கு ‘உடுபா’ (நட்சத்திரங்களின் தலைவன்) என்று பெயர் வந்தது உடுபா நாளடைவில் மருவி ‘உடுப்பி’ ஆயிற்று. உடுப்பி கிருஷ்ணன் கோவில் கர்நாடகாவில் உள்ள உடுப்பி என்ற ஊரில் அமைந்துள்ளது.