சிலர் எல்லாம் தலை எழுத்து… விதிப்படி தான் நடக்கும்? அதை யாரால மாத்த முடியும்? அப்பவே எழுதி வச்சிட்டான்னு சொல்லி புலம்பித் தவிப்பதைப் பார்த்து இருப்போம். விதின்னு ஒண்ணு இருக்கா? கர்மான்னா என்ன? கர்ம வினைகளை எப்படி தீர்ப்பதுன்னு பார்ப்பபோமா…
கர்மா
கர்மான்னா என்னன்னு அவ்வையார் கிட்ட கேட்டால் ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்றார். பட்டினத்தார் ‘முன் செய்த வினை’ என்கிறார். வள்ளுவர் ‘ஊழ்’ என்று ஒரே வார்த்தையில் சொல்கிறார். சிலப்பதிகாரத்தில் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார்கள். அதில் இருந்து தப்பித்தே போக முடியாது.
சஞ்சித கர்மா
கர்மான்னா என்னன்னா ஏற்கனவே பல கோடி பிறவிகளாக செய்து செய்து சேர்த்து வைத்திருந்த ஒன்று. இதுல 3 வகை. முதல் வகை சஞ்சித கர்மா. மாணிக்கவாசகர் புல்லாகிப் பூடாகி என அவ்வளவு பிறவிகளையும் எழுதியுள்ளார். இந்தப் பிறவிகளில் எல்லாம் செய்த நல்வினை, தீவினை என இரண்டும் சேர்த்துத் தான் கர்மா. இதன் மொத்தத் தொகுப்பு தான் சஞ்சித கர்மா.
பிராரப்த கர்மா
அடுத்து வருவது பிராரப்த கர்மா. பலகோடி பிறவியாய் சேர்த்து வைத்த நல்வினை, தீவினைகளில் இருந்து இந்த பிறவியில் இது இதை அனுபவிக்கணும்னு இருக்கிறது அல்லவா அது தான். அது இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய கர்மா.
ஆகாமிய கர்மா
அடுத்து வருவது ஆகாமிய கர்மா. இப்போது நாம் செய்து கொண்டு இருக்கும் நல்வினை, தீவினைகள் சஞ்சித கர்மாவில் போய்ச் சேரும். இப்போது நாம் செய்து கொண்டு இருக்கும் கர்மாவின் பெயர் தான் ஆகாமிய கர்மா.
நாம் என்ன செய்தோமோ அதற்கான எதிர்விளைவை நாமே அனுபவிப்போம். அது தான் கர்மா. நாம் நல்லது செய்தால் நல்லது வரும். கெட்டது செய்தால் கெட்டது வரும். நமக்கு வரும் பிரச்சனைகள், துன்பத்துக்குக் காரணம் முன்பு நாம் சேர்த்து வைத்திருக்கும் கர்மா தான் காரணம்.
கர்மவினை
பிறவி எடுத்து விட்டோம். திரும்ப திரும்ப கர்மவினைகளை சேகரிப்பதை விட்டு விட்டு இந்தப் பிறவியிலேயே கர்மவினைகளைக் குறைப்பதற்கு ஏதாவது வழி இருக்கா? என்றால் இருக்கு. அதுதான் மனிதப்பிறவி. அதற்கு வழி கடவுளைப் போய் முழு சரணாகதி அடைவது தான். இறைவனைப் போய் இறுகப் பற்றிக் கொண்டு கடவுளை மட்டுமே நம்பி நாம் போகும் அறிவார்ந்த ஞானமான வழி தான் முதல் வழி. அதனுடன் சேர்த்து அன்னதானம் செய்வது தான் மிக முக்கியமானது.
அன்னதானம்
உலகத்திலேயே நம் கர்மவினைகளை அதிகமாகக் குறைக்கக்கூடியது அன்னதானம் தான். இதைப் பலன் கருதியும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் நல்வினை போய்ச் சேர்ந்து விடும். அதனால கர்மா கழியாது. அப்படின்னா எப்படி பண்ணனும்? இறைவன் எனக்குத் தந்ததை அடியார்களுக்குத் தருகிறேன். இது அவர்களுக்கு இறைவனால் என்னிடத்தில் தரப்பட்டது என்ற எண்ணத்தோடு தான் அன்னதானம் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்ல. எல்லா தானமும் பண்ணனும். நான் பண்றேன். நான் பண்றேன்னு சொல்றதுக்கு என்ன இருக்கு? நான் வரும்போது ஏதாவது கொண்டு வந்தேனா? இல்ல கொண்டு போறேனா? அதனால எல்லாமே இறைவன் தந்தது. அதை அடியார்களுக்குச் செய்வதற்காக நம்மிடத்தில் தந்துள்ளார் என்ற எண்ணத்துடன் தான் தானம் செய்ய வேண்டும். அதுதான் நமது கர்மவினைகளைக் கழிக்க முக்கியமான வழி. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.