அடுத்தடுத்து 4 வீரர்களைத் தட்டித் தூக்கிய சிஎஸ்கே.. அதுலயும் 8 வருஷம் கழிச்சு திரும்பிய பிரபல வீரர்..

By Ajith V

Published:

CSK In IPL Auction 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் ஏலம் என வந்துவிட்டால் மிக அமைதியாக இருந்து யாரும் தேர்வு செய்யாத வீரர்களைத் தான் குறி வைத்து சொந்தமாக்க நினைப்பார்கள். ஆரம்பத்தில் ஏலத்தின் போது இதை பார்ப்பதற்கு ஏன் சிஎஸ்கே அணி அப்படி செய்கிறது என்றும் அதிரடியான வீரர்களை ஏன் தேர்வு செய்யாமல் போனது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் அதே நேரத்தில் அந்த வீரர்களைக் கொண்டே சிஎஸ்கே அணி சிறப்பாக தயாராகி பிளே ஆப் அல்லது இறுதி போட்டி வரை முன்னேறுவதற்கான வழிகளையும் கட்டமைக்கும்.

அந்த வகையில் இந்த முறை ஐபிஎல் மெகா லத்திற்கு முன்பாகவும் 5 வீரர்களை தக்க வைத்திருந்த சிஎஸ்கே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 55 கோடியுடன் களமிறங்கி இருந்தது. தோனி, ருத்துராஜ், ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் பதிரானா ஆகிய 5 பேர் இருக்க, ஒரு வீரரை ஆர்டிஎம் முறையில் சொந்தமாக்கலாம் என்ற வாய்ப்பும் இருந்தது.

அதே வேளையில் தங்கள் வசம் பணம் குறைவாக இருந்ததால் ஆரம்பத்தில் பல வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்ட போது பாதி வரையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயற்சி செய்து பார்த்து. அர்ஷதீப் சிங், சாஹல் என பல வீரர்கள் பெயர் சொன்ன சமயத்தில் சிஎஸ்கே அணி முடிந்த வரையிலும் முயற்சி செய்து பார்த்தது.

ஆனாலும், எதிர்பார்த்ததை விட அதிக தொகைக்கு போனதால் சிஎஸ்கே அணி அதன் மீதான முயற்சியை கைவிட்டிருந்தது. இதனால், ஒரு கட்டத்திற்கு மேல் எப்போது தான் சிஎஸ்கே அணி முதல் வீரரை எடுக்கும் என ரசிகர்களே பொறுமையை இழந்து விட்டனர். ஆனால், ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி வீரர்களை எடுக்க ஆரம்பித்ததும் அதிரடியாகவே தான் அமைந்திருந்தது.

முதலில் டெவான் கான்வேவை சொந்தமாக்கி இருந்த சிஎஸ்கே அணி, அடுத்ததாக ராகுல் திரிபாதியை அதே வேகத்தில் சொந்தமாக்கி விட்டது. இதன் பின்னரும் நிறுத்தாத சென்னை சூப்பர் கிங்ஸ், ச்சின் ரவீந்திராவையும் எடுத்து விட்டது. இதில் மற்றொரு சிறப்பம்சமாக தங்கள் அணியில் ஆடிய கான்வே மற்றும் ரவீந்திராவை ஆர்டிஎம் வாய்ப்பை இழக்காமல் சொந்தமாக்கியாதும் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, நீண்ட ஆண்டுகளுக்கு முன் சிஎஸ்கே அணியில் ஆடியிருந்த இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினையும் சிஎஸ்கே அணி 9.75 கோடி ரூபாய்க்கு சொந்தமாக்கி உள்ளது. பல ஐபிஎல் ஏலங்களாக சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மண்ணின் மைந்தனான அஸ்வினை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வர, அதனை அவர்கள் தற்போது நிறைவேற்றவும் செய்துள்ளனர்.