பெண்கள் என்றாலே நெற்றியில் பொட்டு வைத்தால் தான் அழகு. திருமணம் ஆனாலும் சரி. ஆகாவிட்டாலும் சரி. அதுதான் மங்கலகரமாகக் காட்டும். திலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது, இறை வழிபாட்டின் ஓர் அங்கம் என்றே சொல்லலாம்.
இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ ஆராய்ச்சிகளின் படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. ‘எலக்ட்ரோ மேக்னடிக்’ என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அந்த வகையில் மனித உடலில் மிக முக்கியமான இடம் இது.
உடலின் சக்தி
அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது.
தீய சக்திகள் அணுகாது
எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைக்கும். தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காப்பது பொட்டு தான். அதாவது வசியம் பண்ணும் வக்கிரக்காரர்கள் பெண்களின் நெற்றிப் பொட்டைத் தான் குறி வைப்பார்களாம். அந்த இடத்தில் அவர்கள் பொட்டு வைத்து விட்டால் அவர்களுக்கு அது இடையூறாக இருக்கும். அதனால் வசியம் பண்ண முடியாமல் பின்வாங்கி விடுவார்களாம்.
லட்சுமிகரமானது
திலகத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளும்போது “இதன் மூலம் நான் கடவுளை எப்போதும் மனத்தில் இருத்துகிறேன். இறைத் தன்மையுள்ள இந்த உணர்வு, எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவிப் பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும் நேர்மையும் உண்மையும் நிறையட்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றித் திலகம் லட்சுமிகரமானது என்பர்.
மகாலட்சுமி
தான் ‘வீட்டுக்கு வரும் மகாலட்சுமி’ என புதுமணப் பெண்ணை சொல்கிறார்கள். அவர் கையால் வீட்டில் விளக்கேற்றும்போது வீடே கோவிலாகிறது. வீடு எங்கும் இறைசக்தி நிரம்புகிறது. பூஜை அறையில் தினமும் வழிபடுகையில் சாம்பிராணி, ஊதுவத்தி, மணியோசை, சூடம் ஏற்றுவது, அகல்விளக்கு ஏற்றுவது, பாராயணம் பாடுவது என எல்லாமே வீட்டுக்கு வரும் மகாலட்சுமி தான் செய்கிறாள்.
பாரதிகண்ட புதுமைப்பெண்கள்
அதனால் பெண்களுக்கு எல்லா இடங்களிலும் மரியாதை தான். மேலும் ஆண்களை விட அதீத மனோசக்தி படைத்தவள் பெண். தன்னம்பிக்கை நிறைந்து இருப்பதால் தான் இன்று பல்வேறு துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக ஜெயித்து வருகிறாள் என்றே சொல்லலாம். பாரதிகண்ட புதுமைப்பெண்கள் இப்போது நாட்டில் அதிகமாகி வருவது ஆரோக்கியமான விஷயம் தான்.
அந்த வகையில் பெண்கள் குங்குமம் வைக்கும்போது, ‘ஸ்ரீயை நமஹ’ என்றோ, “மகாலட்சுமியே போற்றி’ என்றோ சொல்லியபடி வைத்துக்கொள்வது நலம் பயக்கும்.