நடிகர் ரகுமான் ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும். ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியின் தங்கையைத் தான் ரகுமான் வாழ்க்கைத் துணையாக ஏற்றிருக்கிறார். அபுதாபியில் பிறந்த ரகுமான் மலையாளத் திரையுலகில் 1983-ல் கூடுவிடே என்ற படத்தில் தான் அறிமுகமானார்.
அதன்பின் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமானுக்கு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த புதுப்புது அர்த்தங்கள் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. கல்யாண மாலை பாடலும், குருவாயூரப்பா பாடலும் இவரை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. குறிப்பாக பெண்கள் விரும்பும் ஹீரேவாக மாறினார் ரகுமான்.
ரசின் ரகுமான் என்ற இயற்பெயர் கொண்ட ரகுமான் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். பல வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த சங்கமம் படம் இவருக்கு திருப்புமுனையைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து வில்லனாக, இரண்டாவது நாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.
ராம் படம் இவருக்கு செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்து வைக்க அதனைத் தொடர்ந்து வந்த பில்லா, சிங்கம் 2, துருவங்கள் பதினாறு போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது அதர்வா, சரத்குமார் நடித்துள்ள நிறங்கள் மூன்று படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரகுமான் தனது குடும்ப ரகசியம் ஒன்றை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
ஒருமுறை ரகுமான் ஷூட்டிங்கிற்காக இலங்கை சென்றிருந்த நேரத்தில் அங்கே இவரது தீவிர ரசிகை ஒருவரைச் சந்தித்தாராம். அந்த ரசிகையின் பெற்றோர் ரகுமானிடம் உங்கள் மேல் இவள் மிகுந்த காதல் கொண்டுள்ளாள். எனவே நீங்கள்தான் இவளை மாற்ற வேண்டும் என்று கூற, அன்று ஷுட்டிங் முடிந்ததும் ரகுமான் அந்த ரசிகையின் வீட்டிற்குச் சென்றாராம். அங்கு அவரது அறையை பார்த்தவருக்கு அதிர்ச்சி. சுவர் முழுக்க ரகுமான் புகைப்படங்களை சேகரித்து ஒட்டியிருக்கிறார். மேலும் ரகுமான் வந்த போது அவரிடம் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டே இருந்தாராம். அந்த அளவிற்கு ரகுமான் மேல் காதல் கொண்டிருந்தார் அந்த ரசிகை.
ரகுமானுக்கு அந்த நேரத்தில்தான் திருமணம் முடிந்திருந்தது. எனவே அந்த ரசிகையிடம் எடுத்துக் கூறி அவரை மாற்றியிருக்கிறார். மேலும் இது பற்றி தனது மனைவியிடமும் தெரிவித்திருக்கிறார் ரகுமான். பின்னாளில் அந்த ரசிகையின் அன்பை மதிக்கும் பொருட்டு தனக்குப் பிறந்த முதல் குழந்தைக்கு அந்த ரசிகையின் பெயரான ரூஸ்டா என்பதை சூட்டியிருக்கிறார். அதேபோல் அந்த ரசிகையும் பின்னாளில் திருமணம் செய்து கொண்டு அவருக்குப் பிறந்த முதல் குழந்தைக்கு ரசின் என்று ரகுமானின் பெயரைச் சூட்டியிருக்கிறார்.