சென்னை: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு அடுத்த 2 நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி , திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. பொதுவாக கார்த்திகை மாதம் அடை மழைக்காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும். அந்த வகையில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்த வருகிறது. வரும் நவம்பர் 23 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய அறிவிப்பில் கூறுகையில், வரும் 23 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதனால் மழை இன்னும் தீவிரமடைந்து பெய்யலாம். தமிழகத்தில் இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை, வட கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமையில் இருந்து லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
வரும் 23 ஆம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 2 நாட்களில் மாறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரமடைந்தால் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. எனினும் அடுத்தடுத்த நாட்களை வைத்து தான் கூற முடியும்” என்று வானிலை மையம் கூறியுள்ளது. இது தமிழகத்தை நோக்கி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.