இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்ற போது, இது குறித்த தகவல் அறிந்த இந்திய கப்பற்படை விரட்டி பிடித்து இந்திய மீனவர்களை மீட்டு கொண்டு வந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் இலங்கை ராணுவத்திடம் இருந்து தமிழக மீனவர்களை ஏன் மீட்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இந்திய மீனவர்களை பாகிஸ்தான் பாதுகாப்பு ஏஜென்சியை சேர்ந்த வீரர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர். இது குறித்த தகவல் அறிந்ததும், இந்திய கப்பற்படை விரைந்து சென்று பாகிஸ்தான் பாதுகாப்பு ஏஜென்சியின் கப்பலை வழிமறித்து, இந்திய மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்தது. இதன் மூலம் 7 மீனவர்கள் இரண்டே மணி நேரத்தில் மீட்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இதே போன்ற நடவடிக்கையை இலங்கை கடற்படைக்கு எதிராக இந்திய ராணுவம் எடுக்காதது ஏன் என்ற கேள்வியை தமிழக மீனவர்களும் பொதுமக்களும் எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.