‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’… புண்ணியம் கோடி கிடைக்கும்… மிஸ் பண்ணிடாதீங்க..!

By Sankar Velu

Published:

‘எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தானே… இத்தனைப் போராட்டமும்’னு சொல்வதுண்டு. இது எதற்கு இப்படி சொல்றாங்கன்னு கொஞ்சம் யோசிச்சிப் பார்த்தா அது உண்மை தான்னு புரியும். ஆரம்பத்தில் பசிக்காக வேட்டையாடினான் மனிதன்.

சந்தோஷமாக இருந்தான். தொடர்ந்து நவநாகரிக காலத்தில் அவனுக்குப் பல வசதிகள் தேவைப்பட்டன. பொருள்களைக் கண்டுபிடித்தான். ஆடம்பரமாக வாழ்ந்தான். பல துன்பங்களையும் விலை கொடுத்து வாங்கினான்.

பலவழிகளில் கஷ்டப்படுகிறான். இப்போது மீண்டும் அந்தக் கஷ்ங்களை எல்லாம் போக்க வேண்டும் என்று ஆன்மிகத்தை நாடுகிறான். ஒரு காலத்தில் கோவிலுக்குப் போவது பெரியவங்க தான்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்களும் கோவில் கோவிலா ஏறி இறங்கிறாங்க. அதுதான் கடவுளின் திருவிளையாடல்.

எப்போ எந்த விசேஷம் நடந்தாலும் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் அல்லவா. சரி. விஷயத்திற்கு வருவோம்.

16 வகையான பொருள்

Annabishegam
Annabishegam

ஐப்பசி மாதம் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கந்த சஷ்டி. அடுத்து அன்னாபிஷேகம் தான். இவற்றில் கந்த சஷ்டி நிறைவடைந்து விட்டது. இனி ஆண்டுக்கு ஒருமுறை சிவன் கோவில்களில் நடக்கும் அற்புதமான விசேஷமான அன்னாபிஷேகம் பற்றிப் பார்ப்போம்.

உலகிற்கே படியளப்பவர் சிவன். இவருக்கு 16 வகையான பொருள்களால் தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது. இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் அன்னாபிஷேகம் மிக மிக விசேஷம்.

சோறு கண்ட இடம் சொர்க்கம்

அந்தக் காலத்தில் அவனுக்கு என்ன, ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்பார்கள். அதற்கு பலரும் தவறான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு சாப்பிடுவது பற்றி சொல்லி வருகிறார்கள். அவன் சாப்பாட்டுக்காகவே அலைகிறான் என்பார்கள். ஆனால் உண்மைப் பொருள் அதுவல்ல. அது அன்னாபிஷேகம் கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதாகும். அது மட்டுமல்லாமல் கோடி சிவலிங்கங்களைத் தரிசித்த புண்ணியமும் கிடைக்கும்.

பௌர்ணமி

இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் எப்போது வருகிறது தெரியுமா? ஐப்பசி மாதத்தின் கடைசி நாளும் அதுதான். ஐப்பசி 29 வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் வருகிறது. ஆங்கில தேதி என்றால் நவம்பர் 15 அன்று வருகிறது.

அன்றைய தினம் அதிகாலை 3.53 மணிக்கு பௌர்ணமி ஆரம்பிக்கிறது. மறுநாள் அதிகாலை 3.42 மணி வரை இந்தத் திதி உள்ளது. மேலும் அன்று அஸ்வினி, பரணி, கிருத்திகை ஆகிய 3 நட்சத்திரங்களும் இணைந்து வருவதால் அந்த நாள் வெகுசிறப்பானது.

அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம் அன்று சிவலிங்கத்தை அன்னத்தால் அலங்கரித்து இருப்பார்கள். அதைப் பார்க்க பார்க்க பேரானந்தமாக இருக்கும். சிவன் கோவில்களில் பொதுவாக உச்சிகால வேளையிலும், மாலை நேரத்திலும் இந்த அன்னாபிஷேகத்தை நடத்துவார்கள். இதைப் பார்த்தால் பெரும் புண்ணியம்.

Annabishegam
Annabishegam

இப்படி அபிஷேகம் செய்த அன்னம் பிரசாதமாகக் கொடுக்கப்படும். இதை சாப்பிட்டால் குழந்தை பேறு நிச்சயம் உண்டாகும். தொழில் விருத்தியாகும். மனநிம்மதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகி வளமான எதிர்காலம் வரும். உடல் நலம் உண்டாகும்.

நவம்பர் 14….ஆ? 15…ஆ?

திருவண்ணாமலை கோவிலில் அஸ்வினி நட்சத்திரத்தில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதால் அன்னாபிஷேகம் நவம்பர் 14ம் தேதி நடக்க உள்ளது. இந்த அஸ்வினி நட்சத்திரம் நவம்பர் 14ம் தேதி அதிகாலை 1.52 மணிக்குத் துவங்கி நவம்பர் 15ம் தேதி நள்ளிரவு 12.12 மணி வரை உள்ளது. அதனால் சில சிவன்கோவில்களில் நவம்பர் 14ம் தேதியும் அன்னாபிஷேகம் நடக்கிறது.