கந்த சஷ்டியின் 7வது நாள் 8.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நிறைவுபெறுகிறது. 6 நாள்கள் விரதம் இருக்க வைத்ததற்கு முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லுங்க. விரதம் இருக்கும்போது வரும் உடல்சோர்வு குறித்து கவலைப்படாதீர்கள். அதை முருகப்பெருமான் அப்படியே கொண்டு போய் அதன்பிறகு புத்துணர்வைத் தந்துவிடுவார்.
நீங்க கேட்டதை அடுத்த வருஷம் கையில் கண்டிப்பா முருகப்பெருமான் கொடுப்பார். சுவாமி இன்று தான் திருக்கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார். வள்ளி, தேவசேனா சகிதராகக் காட்சித் தரப் போகிறார். முருகப்பெருமானின் அவதாரமே சூரனை சம்ஹாரம் செய்றது தான்.
சூரனை சம்ஹாரம் செய்ற வரைக்கும் தனக்குள் இருக்கும் சக்திகளைத் தள்ளி வைக்கணும் என்பதற்காக இச்சா சக்தியாகிய வள்ளியையும், கிரியா சக்தியாகிய தெய்வயாணை அம்மையாரையும் மேலோகத்தில் ஒருவர், பூலோகத்தில் ஒருவர் என அனுப்பினார். சம்ஹாரம் முடிந்தபிறகு தேவர்கள் எல்லாரும் முருகப்பெருமானை வணங்கினார்கள். அவங்க முருகப்பெருமானுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சாங்க. அப்போது தேவர்களின் தலைவரான தேவேந்திரன் தன்னோட வளர்ப்பு மகளை முருகப்பெருமானுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டார்.
நாராயணருடைய கண்களில் இருந்து வந்தவர்கள் தான் அமிர்தவள்ளி, சுந்தரவல்லி. அவங்க தான் தெய்வயாணையாகவும், வள்ளியாகவும் வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாராயணர், பிரம்மன், இந்திரன் எல்லாரும் முருகப்பெருமானிடம் மணம் பேசி, அவர் தெய்வயாணையை திருப்பரங்குன்றத்தில் மணந்து கொண்டார். வள்ளியைக் காதலித்துக் கல்யாணம் பண்ணி திருத்தணியில் வந்து அமர்ந்தார்.
வள்ளி, தேவசேனாவை நாம் திருக்கல்யாண வைபவமாக செய்து பார்க்கக் கூடிய அழகான உன்னதமான நாள் தான் இந்த ஏழாவது நாள். இன்று பக்கத்தில் உள்ள முருகர் கோவிலில் கண்டிப்பாகத் திருக்கல்யாணம் வச்சிருப்பாங்க. திருச்செந்தூர்ல இரவு 11 மணிக்கு மேல தான் திருக்கல்யாணம் வச்சிருப்பாங்க.
வெளியூர்ல இருந்து வர்றவங்க இரவு 11 மணிக்கு மேல விரதத்தை நிறைவு பண்ண முடியலைன்னு நினைக்கிறவங்க உங்க ஊர் பக்கத்துல உள்ள முருகர் கோவில்ல போய் திருக்கல்யாணத்தைப் பார்த்துட்டு விரதத்தை நிறைவு செய்யுங்க. நிறைய இடங்களில் காலையும், மாலையும் திருக்கல்யாணத்தை வச்சிருப்பாங்க. நீங்க பொதுவாக மாலை 6 மணிக்கு மேல விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
சற்கோண தீபம் ஏற்றி பிரார்த்தனை பண்ணிக்கோங்க. சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் ஏதாவது ஒரு நைவேத்தியம் வைக்கலாம். கலசம் வைத்திருப்பவர்கள் வெள்ளிக்கிழமை என்பதால் விரதம் முடித்ததும் அதைக் கலைக்க வேண்டாம். கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ளலாம். படம் வைத்துள்ளவர்கள் அதை எடுத்து அதை எங்கு மாட்டி இருந்தீர்களோ அங்கேயே மாட்டி விடுங்கள்.
சனிக்கிழமை அன்று பூஜை அறையில் மாட்டி விடுங்கள். கலசம் எடுக்கும்போது தேங்காயை இனிப்புப்பொருள் செய்து சாப்பிடலாம். மாவிலை, தர்ப்பை, எலுமிச்சையை பூஜை அறை குப்பையில் சேருங்க. நாணயத்தைப் பணப்பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தண்ணீரை முருகர், வேலுக்கு அபிஷேகம் பண்ணிக் கொள்ளுங்கள். இந்தத் தீர்த்தத்தைக் கொஞ்சம் குடித்து விட்டு, வீட்டில் எல்லாப் பக்கமும் தெளித்துக் கொள்ளலாம்.
சனிக்கிழமை காலை 7.45 மணி முதல் 8.45 மணிக்குள் கலசத்தைப் பிரிக்கலாம். கையில் காப்பு கட்டி இருப்பவர்கள் பெரியவர்களை வைத்து கழட்டச் சொல்லுங்க. அதைக் கோவிலில் மரம் இருந்தால் அங்கு கட்டிவிடுங்க. அல்லது பூஜை அறை குப்பையில் சேர்த்து விடுங்க. விரதம் பூர்த்தி செய்த பிறகு வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டுப் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாம்.
அல்லது முருகப்பெருமானையே வணஙங்கி திருநீர் பூசிக்கொள்ளுங்கள். விரதத்தை நிறைவு செய்ததும் தண்ணீர், பால், பழச்சாறு, காரம் குறைந்த உணவுகள் என கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிங்க. ஜாதகத்தை வைத்துப் பூஜை செய்தவர்கள் திருக்கல்யாணத்தன்று உங்க ஊர் கோவில் முருகப்பெருமானிடம் வச்சி பூஜை செய்து அர்ச்சனை பண்ணிட்டு அதன்பிறகு ஜாதகம் பாருங்க. நல்ல வரன் கிடைக்கும்.
என்ன வகையான தோஷமாக இருந்தாலும் எல்லாவற்றையும் நீக்கி முருகப்பெருமாள் அருள்புரிவார். 7வது நாள் நாள் என்செய்யும் என்ற பதிகத்தை மனதில் இறுத்தி பாராயணம் செய்து கொள்ளுங்கள். அதே போல சேந்தனை என்று தொடங்கும் பதிகத்தையும் சேர்த்துப் பாடலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.