அப்படி இப்படி என்று ஒருவழியாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த மாநாட்டு ஏற்பாட்டு பணிகள் அனைத்தும் முடிந்து நேற்று மேடை தயாரானது.
நேற்று இரவு தவெக தலைவர் விஜய் நேரில் பார்வையிட்டதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் தேசிய அரசியலா, அல்லது மாநில அரசியலா அவரின் கொள்கைகள் என்ன என்பது பற்றி ஊடகங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் விவாதம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.
மாநாட்டிற்கு சாரைசாரையாக தவெக தொண்டர்களும், பொதுமக்களும், விஜய் ரசிகர்களும் வந்த வண்ணம் உள்ளனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேடை முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநாட்டில் தமிழகம் மற்றும் தேசிய நலன் சார்ந்த 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அதில் ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் விலக்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மின்சாரக் கட்டணம் உயர்வு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை கொண்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது. மேலும் இன்றைய மாநாட்டில் விஜய்யின் அடுத்த மூவ் எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிய இந்தியாவே அவரின் பேச்சை எதிர்நோக்கியுள்ளது. ஏனெனில் விஜய் நாடெங்கிலும் ரசிகர் பட்டளாத்தினைக் கொண்டு சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்கிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் இதேபோன்று தான் அதிமுக-வை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தார்.
அந்த வகையில் விஜய்யின் முழு அரசியல் பிரவேசத்திற்கு இன்று அச்சாணி போடும் விதமாக இந்த மாநாடு நடைபெற உள்ளதால் சமூக உடகங்களில் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே ஆக்கிரமித்துள்ளது.