இந்திய கிரிக்கெட் அணி தங்களின் டெஸ்ட் பயணத்தில் மறக்க முடியாத ஒரு நாளாக அக்டோபர் 17ஆம் தேதி அமைந்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆரம்பமாகி இருந்தது. இந்த போட்டிக்கு முன்பாகவே 5 நாட்களும் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் நாள் முழுக்க மழையால் ரத்தாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளும் அதிகம் வெளிச்சம் இல்லாமல் தான் ஆரம்பமாகி இருந்தது. இதற்கு மத்தியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடத் தொடங்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தது. ரோஹித் இரண்டு ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த கோலி மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தனர்.
இதன் பின்னர் வந்த பந்த் 20 ரன்களில் அவுட்டாக, தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலும் 13 ரன்களில் நடையை கட்டி இருந்தார். அடுத்து வரிசையாக வந்த ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய மூன்று பேருமே டக் அவுட்டாக, இந்திய அணி 39 ரன்களுக்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
கடைசி கட்டத்திலும் யாராலும் காப்பாற்ற முடியாமல் போக இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவர் மட்டும் தான் பத்து ரன்களுக்கு மேல் எடுத்திருந்தனர். இன்னும் பல வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக ஐந்து வீரர்கள் டக் அவுட்டாகி இருந்ததும் இந்திய அணியின் மீது அதிக விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையே தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, இரண்டாம் நாள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. இப்போதே 134 ரன்களுடன் நியூசிலாந்து அணி முன்னிலையில் இருந்து வரும் சூழலில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் மிகப் பெரிய ஆட்டத்தை விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், சொந்த மண்ணில் முதல் முறையாக இந்திய அணிக்கு ஒரு மோசமான சாதனை அரங்கேறி உள்ளது. இந்திய மண்ணில் தற்போது ஆல் அவுட்டான 46 ரன்கள் தான் அவர்களின் குறைந்தபட்ச ஸ்கோராக பதிவாகி உள்ளது. அத்துடன் மட்டுமில்லாமல், சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் முதல் ஏழு வீரர்களில் நான்கு பேர் டக் அவுட்டாகி உள்ளனர்.
இதுவரையிலும் இப்படி ஒரு பரிதாபம் இந்திய அணிக்கு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் நேர்ந்தது இல்லை என்ற நிலையில் கோலி, ராகுல், சர்பராஸ் கான் மற்றும் ஜடேஜா ஆகிய நான்கு பேர் முதல் 7 வீரர்களில் டக் அவுட்டாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.