இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்..!

By Bala Siva

Published:

இன்று காலை 10 மணி வரை, தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், அவசியத் தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதேபோல், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 440 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதை அடுத்து, சென்னை உள்பட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, மேற்கண்ட 10 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அவசியத் தேவை இருந்தால் மட்டும் வெளியே வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.