பொதுவாக நாம் தமிழகத்தில் அதுவும் நமக்கு அருகாமையில் உள்ள கோவில்களுக்கு அடிக்கடி செல்வதில்லை. அதன் பெருமையை உணர்வதுமில்லை. உலகநாடுகளில் இருந்தும் இங்கு வந்து கோவிலின் சிறப்பை உணர்ந்து செல்கிறார்கள்.
நாம் ஆர்வம் காட்டுவது இல்லை. நாமும் அத்தகைய சிறப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.
மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். இந்தக் கோவிலின் சிறப்புகளைப் பற்றிப் பார்க்கலாம். மீனாட்சி அம்மன் விக்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏன்னா அம்மனின் திருமேனி பச்சை நிறம் தான். அன்னையின் வலது கால் சற்றே முன்னோக்கி இருக்கும். இது ஏன்னா பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக என்கிறார்கள்.
அன்னை கைகளில் ஏந்திய கிளி அவளது காதில் பேசுவது போல் இருக்கும். இது ஏன்னா கிளி பேசுவதை திருப்பிப் பேசக்கூடியது. அதைப்போல பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லுமாம் அந்தக் கிளி. இதனால் நமது வேண்டுதலும் சீக்கிரமாக நிறைவேறும். மீனாட்சி அன்னை சுயம்புவாகத் தோன்றியவள். அதனால் அது சுயம்பு விக்ரகம். சில கோவில்களில் லிங்கம் சுயம்புவாக இருக்கும்.
ஆனால் மதுரையில் மீனாட்சி உக்கிரபாண்டியனுக்கு முடிசூட்டியதும் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்கிரமாக நின்றுவிட்டாள். அதனால் சுயம்பு அன்னை என்கிறார்கள். மதுரை யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள் அன்னை. இவளது பெயர் தடாதகை அங்கயற்கண்ணி. பாண்டிய மகாராஜாவுக்கும், காஞ்சனமாலை மகாராணிக்கும் பிறந்த ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆகிறாள்.
இங்கு கர்ப்பக்கிரகத்தில் அன்னையின் விக்ரகம் உயிரோடு இருப்பது போல இருக்கும். அன்னையே சிலையாக மிகவும் அழகாக இருப்பாள். இவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும்.
அன்னையின் சிலை மிகவும் நளினமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாகக் கிடைக்கும். மதுரையைப் பொருத்தவரை அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதல்ல வணங்க வேண்டும். அப்புறம் தான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் மதுரையை ஆட்சி புரிவார்கள் என்பது சிவவாக்காக உள்ளது. இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல்களைப் புரிந்துள்ளார். வேறு எந்த கோவிலிலும் இத்தனை திருவிளையாடல்கள் நடந்தது இல்லை.
பொதுவாக அனைத்து சிவன் கோவில்களுமே முக்தியைத் தரும். ஆனால் சகல செல்வத்தையும் தருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்த ஊர் என்பதால் மதுரைக்கு வந்தாலே முக்தி. இந்தக் கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய அம்மன் கோவிலும், சக்தி பீடமும் உள்ள கோவில் இதுதான்.
வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய உன்னதமான கோவில் இது. சித்திரை திருவிழா அன்னைக்கும்இ ஆவணி மூல பெருவிழா சுவாமிக்கும் விமரிசையாக நடைபெறும் விழாக்கள். மிகவும் அழகிய கோபுரங்கள் கொண்ட கோவிலும் இதுதான்.
தமிழகத்தில் மிகப்பெரிய விழாவாக நடக்கும் கோவிலும் இதுதான். சைவ, வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றும் விழாவாக சித்திரைத்திருவிழா கொண்டாடப்படுகிறது. உலக அதிசயங்களில் மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்றே என்று சொல்லலாம். அன்னையை சரண் அடைந்தால் நம்மை நிச்சயம் காப்பாள்.