இளைஞர்களின் விடிவெள்ளியாக இருந்த ரத்தன் டாடா… சிறுவயதிலேயே சோதனை… வளர வளர சாதனை!

By Sankar Velu

Published:

எந்த ஒரு மனிதனுக்கும் பேக்ரவுண்டு அதாவது பின்புலம் தான் முக்கியம். தான் மட்டும் தனித்து இருந்து வெறி கொண்டு உழைத்து முன்னுக்கு வந்துவிடலாம். அதற்கு ஏற்ப சந்தர்ப்ப சூழல்களும் வாய்க்க வேண்டும். அப்படி வாய்க்காத போது அத்தகைய சூழல்களை உருவாக்கத் தெரிந்து இருக்க வேண்டும்.

சூழல் சரியில்லையே என முடங்கிக் கிடப்பவன் மூடன். சூழல்களை உருவாக்குபவன் அறிவாளி. அப்படிப்பட்ட மாமனிதர் தான் ரத்தன் டாடா. இன்று அவரை நாம் கோடீஸ்வரர் என்று எளிதில் சொல்கிறோம். ஆனால் அதற்கு அவர் கடந்து வந்த பாதை அபாரமானது.

அத்தகைய பாதையின் சுவடுகளை நாம் பின்பற்றினாலே போதும். அதில் 10 சதவீதம் நடந்தால் கூட நாமும் முன்னுக்கு வந்துவிடலாம். சிந்தனையும், கடின உழைப்பும், நம்பிக்கையும் தான் மனிதனுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும் படிக்கட்டுகள். வாங்க ரத்தன் டாடாவைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்தியத் தொழில்துறையின் ஒரு முகம் என்று சொன்னால் அது ரத்தன் டாடா தான். 28.12.1937ல் மும்பையில் பிறந்தார். அவருக்கு 10 வயதான போது பெற்றோர் விவாகரத்து செய்தனர். அதனால் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். 1959ல் அமெரிக்காவில் கட்டிடக் கலை படிப்பை முடித்தார். பின்னர் இந்தியாவில் டாடா குழுமத்தில் ஒரு ஊழியராக பணியைத் தொடங்கினார்.

1991ல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற அவர் 1998ல் டாடா இண்டிகாவை அறிமுகப்படுத்தி, 1 லட்ச ரூபாய்க்கு நானோ கார் வழங்கி, ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை கையகப்படுத்தினார்.

Rathan tata
Rathan tata

நிறுவனங்களின் மீது அதிகமான செல்வாக்கு மற்றும் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும் லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாத பணக்காரராக ரத்தன் டாடா பார்க்கப்பட்டார்.

ஒன்றிய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த கொடையாளியாகவும் அறியப்பட்ட ரத்தன் டாடா, இறுதி காலத்தில் ஸ்டார்ப் – அப் நிறுவனங்களில் முதலீடு செய்து இளைஞர்களை ஊக்குவித்தார். வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் மிக முக்கியம்.

இசிஜி(ECG)யில் கூட கோடு நேராக சென்றால் நாம் உயிரிழந்து விட்டதாக அர்த்தம் என்றார் ரத்தன் டாடா. அதே போல வேகமாக நடக்க வேண்டும் எனில், தனியாக செல்லுங்கள். நீங்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டும் எனில் யாருடனாவது சேர்ந்து செல்லுங்கள் என்று சிந்திக்கத் தூண்டும் வகையில் தனது கருத்துகளை இளைஞர்கள் மத்தியில் விதைத்தார் ரத்தன் டாடா.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ரத்தன் டாடா நேற்று இரவு(09.10.2024) மும்பையில் வயது முதிர்வின் காரணமாக காலமானார்.