நவராத்திரியின் 10ம் நாள் விழாவாக தசரா கொண்டாடப்படுகிறது. வரும் அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தசரா விழா நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவில் ராமர் ராவணனைக் கொன்ற நாளாக ராம்லீலா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பெரிய மைதானத்தில் ராவணனின் உருவப் பொம்மைகளை ராமர் அம்பு எய்தி எரிப்பது போன்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேபாளம், வங்காளதேசத்திலும் இந்த விழா வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் முடிந்து மீண்டும் தங்கள் படைபலத்தை தசரா அன்று தான் பெற்றார்களாம்.
அதிலும் இந்தியாவில் மைசூர் தசரா பிரசித்திப் பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தென் தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் தசரா விளங்குகிறது.
உலகையே ஆட்டிப் படைக்கிறான் மகிஷாசூரன். அவனை அழிக்க தேவி, துர்க்கையாக அவதரித்து 9 நாள்கள் அந்தப் போர் நடைபெறுகிறது. 10வது நாளான விஜயதசமி அன்று அவனை சம்ஹாரம் செய்கிறாள். இது தென்னிந்தியாவின் குலசேகரப்பட்டினத்தில் விமரிசையாக நடைபெறுகிறது.
குலசை தசராவில் பக்தர்கள் மாலை அணிந்து வேடம் போட்டு ஊர்வலமாக சென்று அம்மனை வழிபடுவர். தசரா திருநாளில் மகிஷாசூர வதம் நடக்கும்.
அந்த வகையில் காளி, பத்ரகாளி, கருங்காளி, கிறுக்கன், போலீஸ், எலும்புக்கூடு, ராஜா, பெண், புலி, கரடி, அனுமன் வேடங்களில் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது கண்கொள்ளா சிறப்பு. அதே போல பலருக்கும் தெரியாத மைசூர் தசரா விழாவின் சிறப்பு என்னென்ன என்பதைப் பார்ப்போமா…
விஜய நகர மன்னர்கள் 16ம் நூற்றாண்டில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக தன் ராஜ்ஜியத்தின் ஒரு அங்கமாக கலை, கலாச்சாரம், வீரம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் அப்போதைய தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் வரை படைகள் சூழ ஊர்வலமாகச் சென்றனர்.
அதன் மூலம் தன் நாட்டு மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கையையும் எதிரி நாட்டு அரசர்களுக்குத் தங்களது படைபலத்தையும் காட்டினர். இந்தப் பாரம்பரியம் விஜய நகர அரசுக்குப் பின்னரும் வளர்ந்தது. மைசூர் மன்னர்களான உடையர்களும் தசரா கொண்டாட்டத்தைத் தொடர்ந்தனர்.
அப்போது அந்த ராஜ்ஜியம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருக்கும். மன்னர்களின் ஊர்வலம் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என தன்னோட முழு ராணுவமும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும்.
413வது ஆண்டாகக் கொண்டாடப்பட்டு வரும் தசரா நவீன காலத்துக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளது. ஊர்வலத்தில் முக்கிய நிகழ்வான யானை சாமுண்டீஸ்வரி தேவியின் அம்பாரியை சுமந்து அரண்மனையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வன்னி மண்டபம் வரை செல்லும்.
அப்போது அதற்கு முன்னும் பின்னும் மாநிலத்தின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அதுமட்டுமல்ல. தசரா காலகட்டத்தில் அரண்மனையில் நடைபெறும் ராஜதர்பார் அன்றைய மன்னர் ஆட்சியை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்.
கொரோனா காலகட்டத்திலும் 400 ஆண்டுகளில் இல்லாத அளவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இறுதிநாளான தசரா விழாவில் யானை அம்பாரியை சுமப்பது சிகர நிகழ்ச்சியாகும்.