எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் இருக்காது. அது ஒரு செம்பு அல்லது பித்தளையான பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருக்கும். அது நேர்மறை ஆற்றல்களை உள்வாங்கி அந்த வீடு முழுவதும் பரப்பும் சக்தி வாய்ந்தது.
அங்கு தீர்த்தமாக மாறுகிறது. இறைவனுக்குப் பூஜை செய்த தண்ணீரை தீர்த்தம் போல அருந்தலாம். தினமும் பழைய தண்ணீரை எடுத்து செடியில் அல்லது கால் படாத இடங்களில் ஊற்றலாம்.
அதன்பிறகு எச்சில் படாத சுத்தமான புதிய தண்ணீரை பூஜை அறையில் வைக்க வேண்டும். வைத்த தண்ணீர் படிப்படியாகக் குறைய வேண்டும். இதுவே நன்மை தரும் விஷயம். செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது வீட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். தண்ணீர் வருணபகவானைக் குறிக்கிறது. அதனால் தான் பூஜை அறையிலும் வைக்க அறிவுறுத்தப்படுகிறது.
இதனால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களும் பாதுகாக்கப்படுவார்கள். இறைவனுக்கு ஆரத்தி எடுத்ததும் தண்ணீர் கொடுக்காமல் வழிபாடு முழுமை அடையாது. வீட்டில் வைக்கப்படும் நீரில் சில துளசி இலைகள், பச்சைக்கற்பூரம், ஏலக்காய், வெட்டிவேர் போட்டால் அந்த இடம் முழுவதும் ஒரு நேர்மறை ஆற்றல் பரவும். அந்த இடமே கோவிலாக மாறும்.
வீட்டில் வைக்கப்படும் நீரில் சில துளசி இலைகளைப் போட்டால் அந்த நீர் புனிதமானதாக மாறும். இதை ஒரு புனிதநதியின் நீரைப் போல மாறும். இதனால் வழிபாட்டுத்தலத்தையும் புனிதமாக வைத்திருக்க முடியும். அதனால் தான் பூஜை அறையிலும், கோவில்களிலும் தண்ணீர் வைத்திருப்பது அவசியமானது ஆகக் கருதப்படுகிறது.
பூஜை அறையில் பஞ்சபூதங்களையும் காணலாம். ஆகாயம் என்பது அறையில் வியாபித்து இருப்பது. நிலம் நம்மைத் தாங்கக்கூடியது. நெருப்பு விளக்கேற்றும்போது வரும். காற்று இயற்கையாக இருக்கும். ஆனால் தண்ணீர் மட்டும் இருக்காது. அதனால் தான் பூஜை அறையில் தண்ணீர் வைத்து நாம் வழிபடுகிறோம்.
இப்படி வைக்கிறதால நமக்கு ஐம்பூதங்களின் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். வழிபடும் இடங்களில் வைக்கும் நீர் செழிப்பின் அடையாளம். இந்த நீரை நோக்கி நேர்மறை ஆற்றல் ஈர்க்கப்படுகிறது. இது மனதை அமைதிப்படுத்தும். தண்ணீரை மாற்றி வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.