3690 பந்துகள் போட்டும் ஒரு தடவ கூட அப்படி நடக்கலயா.. 615 ஓவர்களாக பும்ரா செஞ்சு வரும் அற்புதம்..

By Ajith V

Published:

சமகால சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவிலிருந்து மட்டுமில்லாமல் உலக அரங்கிலேயே நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருப்பவர் தான் ஜஸ்பிரிட் பும்ரா. மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை தனது பந்து வீச்சின் மூலம் அளித்து வருவதுடன் மட்டும் இல்லாமல் அணியில் யார் சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும் கூட அவர்களுக்கெல்லாம் சேர்த்து தனது பந்து வீச்சிலும் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அமெரிக்காவில் நடந்த போட்டிகளில் பந்து வீச்சு தான் பிரதானமாக இருந்தது. அதனை தனக்கு மிக சாதகமாகி கொண்ட பும்ரா, அங்கேயும் தனது அசத்தலான பந்து வீச்சை வெளிக்காட்டி எதிரணிக்கு நெருக்கடியை உருவாக்கியதில் அவரது பங்கு மிகப் பெரியது. அது மட்டுமில்லாமல், உலக கோப்பை இறுதி போட்டியை இந்திய அணி வென்று சாம்பியன் பட்டம் வெல்ல பும்ராவின் பவுலிங் முக்கிய காரணமாக இருந்தது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பும்ராவின் பந்தை எதிர்கொண்டாலும் அதனை அடித்து ரன் சேர்ப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்க தான் அவர்கள் இன்னும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு யாரும் கணிக்க முடியாத வகையில் தனது பந்து வீச்சை மிக டெக்னிக்காகவும் மேற்கொண்டு வருகிறார்.

தனது பந்து வீச்சில் மெனக்கெட்டு நிறைய வேரியேஷன்களை காட்டும் பும்ரா, வங்கதேச அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு தான் அதிகமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு நிகராக இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் பும்ரா.

சர்வதேச அரங்கில் பும்ராவின் ஓவரில் 20 ரன்களுக்கு மேல் எந்த போட்டியிலும் இதுவரை போனது கிடையாது. அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக பந்து வீசி எதிரணியினரையும் அச்சுறுத்தி வரும் பும்ரா, டெஸ்ட் அரங்கில் ஒரு முக்கியமான சம்பவத்தை செய்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் பும்ரா 3690 பந்துகளை வீசி இருந்த போது ஒரு சிக்ஸர்களை கூட எதிரணியினருக்கு வழங்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் சிக்ஸர்கள் அடிப்பது அரிதான நிகழ்வாக இருந்தாலும் இத்தனை நாட்களாக அதனை கொடுக்காமல் இருப்பது பெரிய விஷயமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது, சுமார் 615 ஓவர்களை டெஸ்ட் போட்டிகளில் எந்த சிக்சரும் வழங்காமல் பும்ரா வீசி உள்ளார் என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.