டெஸ்ட் அரங்கில் இந்திய அணி மகத்தான ஒரு வெற்றியை வங்கதேச அணிக்கு எதிராக பெற்றுள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை இன்னும் பலமாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளையும் சிறிய இடைவெளியில் இந்தியா சந்திக்க உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளதால் இந்த மூன்று தொடர்களுமே மிக முக்கியமானதாக இந்திய அணிக்கு கருதப்பட்டு வந்தது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும் அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் தொடர்ச்சியாக வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
இதற்கிடையே வங்கதேச அணியை முதல் டெஸ்டில் வீழ்த்தியிருந்த இந்திய அணிக்கு இரண்டாவது போட்டியில் அவர்களை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்று சொல்லலாம். மழையால் போட்டி சரியாக நடைபெறாமல் இருக்க இரண்டு நாட்களில் இரண்டு இன்னிங்ஸ்களையும் முடிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழல் உருவாகி இருந்தது. ஆனால் இதனையும் சவாலாக ஏற்றுக் கொண்ட இந்திய அணி வங்கதேச அணியை இரண்டு இன்னிங்சிலும் மிக எளிதாக ஆல் அவுட் செய்திருந்தது.
அது மட்டுமில்லாமல் தங்களுக்கு கிடைத்த 35 ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து அதிக ரன்களை சேர்த்த இந்திய அணி, பல சாதனைகளையும் புரிந்திருந்தது. அவர்களது ரன் குவிப்பால் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் தட்டுத் தடுமாற 150 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணியின் வெற்றி இலக்கும் எளிதாக இருக்க அதனையும் குறைந்த ஓவர்களிலேயே எட்டி ஐந்தாவது நாளில் போட்டியை சிறப்பாக முடித்திருந்தது.
இந்திய அணி வெற்றி பெறுவது கடினம் என்றே பலரும் குறிப்பிட்டு வந்த நிலையில் அதனை சவாலாக ஏற்று வெற்றி கண்டு தொடரையும் சொந்தமாக்கி உள்ளது. இந்த வெற்றியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணியின் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான டெஸ்ட் தொடரில் குறைந்த வெற்றிகள் பெற்றாலே இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சூழலில் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத ஒரு விஷயத்தை இந்திய அணி முதல் முறையாக செய்து சாதனை புரிந்துள்ளது.
முதல் இன்னிங்சில் 34.4 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி, ஒரு ஓவரை கூட மெய்டனாக எதிர்கொள்ளவில்லை. இரண்டாவது இன்னிங்சிலும் 17.2 ஓவர்கள் பேட்டிங் செய்த அவர்கள் எந்த மெய்டனையும் எதிர்கொள்ளவில்லை. இதன் காரணமாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு மெய்டன் ஓவர் கூட சந்திக்காத முதல் அணி என்ற சிறப்பை இந்திய அணி பெற்று அசத்தி உள்ளது.