கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 12,344 வீடுகள் கட்ட ரூ.285 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
சொந்தமாக வீடு இல்லாத நகர்ப்புற உள்ளாட்சிகளில் வசிப்பவர்கள் அரசு மானியத்துடன் தானாகவே காங்கிரீட் வீடு கட்டிக் கொள்ளுதல் மற்றும் விரிவாக்கம் செய்தல் போன்றவை பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் 51 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் (அனைவருக்கும் வீடு-நகர்ப்புறம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு உட்பட்ட பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினராக இருக்க வேண்டும். வெறெங்கும் சொந்தமாக நல்ல கட்டுமானம் கொண்ட வீடு இருக்கக் கூடாது. குடிசைப் பகுதியில் வசிப்போர் தமது குடிசை, ஓட்டு வீடுகளை திருத்தியமைத்து புதிய வீடு கட்டுமானம், விரிவாக்கம் செய்திடலாம். மத்திய அரசிடமிருந்து ரூ.1½ லட்சமும் (48 சதவீதம்), மாநில அரசிடமிருந்து ரூ.60 ஆயிரமும் (19 சதவீதம்) மானியமாக கிடைக்கப் பெறும். பயனாளியின் பங்குத்தொகை ரூ.1.05 (33 சதவீதம்) லட்சமும் மொத்தம் ரூ.3.15 லட்சம் ஆகும்.
இந்த திட்டத்தின்கீழ் 2015-2016-ம் நிதி ஆண்டில் 392 வீடுகள் கட்ட ரூ.8.23 கோடி மானியம், 2016- 2017-ம் நிதி ஆண்டில் 5,546 வீடுகள் கட்ட ரூ.123.12 கோடி மானியமும், இதே நிதியாண்டில் 2-வது கட்டத்தில் 1,827 வீடுகள் கட்ட ரூ.40.80 கோடி மானியமும், 2017- 2018-ம் நிதி ஆண்டில் முதல் கட்டத்தில் 1,033 வீடுகள் கட்ட ரூ.22.33 கோடி மானியமும், 2-வது கட்டமாக 178 வீடுகள் கட்ட ரூ.3.86 கோடி மானியமும் வழங்கப்பட்டுள்ளது.
2018-2019-ம் நிதி ஆண்டில் முதல் கட்டமாக 688 வீடுகள் கட்ட ரூ.15.13 கோடியும், 2-வது கட்டத்தில் 2,092 வீடுகள் கட்ட ரூ.47.80 கோடியும், 2021- 2022-ம் நிதி ஆண்டில் 550 வீடுகள் கட்ட ரூ.16.31 கோடியும், 2023- 2024-ம் நிதி ஆண்டில் 38 வீடுகளுக்கு ரூ.7.73 கோடியும் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 12,344 வீடுகள் கட்ட ரூ.285.11 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல பேரூராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திடடத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை உருவாக்குதல் மற்றும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை முழுவதுமாக அகற்றுதல் இந்த திட்டத்தின் நோக்கமாகும். கழிவறை இல்லாத வீடுகளுக்கு வீட்டின் உரிமையாளரே கழிவறை கட்டிக் கொள்ள வேலை உத்தரவு வழங்கப்படும். மானியமாக மத்திய அரசு ரூ.4 ஆயிரமும், மாநில அரசு ரூ.2667-ம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் ரூ.2,667-ம் ஆக மொத்தம் ரூ.9,334 வழங்கப்படும். ஒரு தனிநபர் கழிப்பிடத்துக்கு மொத்த மதிப்பீடு ரூ.30 ஆயிரம். எனவே பயனாளியின் பங்குத்தொகை ரூ.20,666 ஆகும்.
இந்த திட்டத்தில் கடந்த 2021-2022-ம் நிதி ஆண்டில் 20 தனிநபர் கழிப்பறைகள் கட்ட ரூ.1 கோடியே 86 லட்சத்து 680-ம் 2023-2024-ம் நிதியாண்டில் 50 தனிநபர் கழிப்பறைகள் கட்ட ரூ.4 கோடியே 66 லட்சத்து 700 மானியமாக வழங்கப்பட்டுள்ளது.