Navaratri 2024: புரட்டாசி மாதத்தில் மணிமகுடமாக விளங்குவது நவராத்திரி. ஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி. அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. அதன் வெற்றித்திருநாள் தான் 10வது நாளான விஜயதசமி.
பெண்மையைப் போற்றும் அற்புதமான திருவிழா. கொலு வைப்பதன் தாத்பரியம் என்னன்னு பார்க்கலாம். கொலுவைத் தொடர்ந்து வைத்து அதை செய்ய முடியும் என்றால் வையுங்க. அதற்கு வைராக்கியம் வேண்டும். ஒரு வருஷம் மட்டும் வைக்க நினைப்பவர்கள் படங்களாக வைக்கலாம்.
கொலுவைத் தொடர்ந்து வைக்க முடியாதவர்கள் கலசமாவது வைத்துக் கொள்ளலாம். அப்படியும் முடியாதவர்கள் கடைசி 3 நாளாவது வசதியைப் பொருத்து வைக்கலாம். 3 படி வைத்துக் கொள்ளலாம். மண் பொம்மைகள் ரொம்ப ரொம்ப விசேஷம். வருஷந்தோறும் வைப்பவர்கள் புதிதாக ஒரு பொம்மையாவது வாங்கி வைக்கலாம்.
கொலு வைப்பவர்கள் காலை, மாலை வழிபாடு, வீட்டுக்கு வருபவர்களுக்குத் தாம்பூலம் கொடுக்கணும். எங்களுக்குப் பொம்மை அடுக்க இடமில்லை என்பவர்கள் அகண்ட தீபத்தை ஏற்றலாம். இதுல அம்பாள் எல்லா சொரூபினியாகவும் அமர்ந்து இருக்கிறாள்.
அவளே அக்னியின் சொரூபி. பெரிதாக அகல் வாங்கி அதுல பஞ்சு திரி, நெய் அல்லது நல்லெண்ணை விட்டு காலையில் ஏற்றி வைத்தால் இரவு படுக்கும்போது சின்னதாகப் பூஜை அறையில் எரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
தீபத்தை மாற்ற வேண்டும் என்றால் அதே விளக்கில் புதுத் திரியை போட்டு விட்டுப் பழைய திரியை எடுத்து விடலாம். இடையில் திரி எரிந்து போனாலோ, திரி எண்ணெயில் அமிழ்ந்து போனாலோ பதற்றம் வேண்டாம். அம்பாளை வணங்கி விட்டு மீண்டும் திரி போட்டு எரியவிடலாம். இதுவும் முடியாதவர்கள் கலசம் அலங்கார வழிபாடு செய்யலாம்.
ஒரு கலசத்தை வைத்து வழிபடலாம். தண்ணீர் அல்லது அரிசி நிறைத்து வைக்கலாம். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தியாக விளங்கும் ஆதி சக்தி அம்மா இதுல எழுந்தருளி எங்களுக்கு
அனுக்கிரகம் பண்ணுன்னு வேண்டிக்கொள்ளலாம்.
மாவிலை, தேங்காய், மலர்கள் வைத்து சந்தனம், குங்குமம் சாற்றி அதையே அம்பாளாக நினைத்து வழிபடலாம். இதுவும் முடியாதவர்களுக்கு இந்த நாலாவது வழிபாடு.
அம்பாளின் திருவுருவப்படம் மீனாட்சி, காமாட்சி என எந்தப் படம் வைத்தாவது வழிபடலாம். அல்லது விக்கிரகம் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து மலர்கள் சாற்றி வழிபடலாம். இடையில் மாதவிடாய் வந்தாலும் கவலைப்பட வேண்டாம். இந்த முறைகளில் எது வாய்ப்பு இருக்கிறதோ அதைச் செய்து வழிபடலாம்.
எப்படி கும்பிட்டாலும் நாம வைக்கக்கூடிய அன்பான வழிபாட்டைத் தான் அம்பாள் பார்ப்பாள். நாம வைக்கும் ஆடம்பரமான பொருளை ஒரு நாளும் பார்க்க மாட்டாள். நமது நிலையை அம்பாள் நிச்சயம் புரிந்து கொள்வாள்.
இந்த ஆண்டு 3ம் தேதி பிரதமை. அது தான் நவராத்திரியின் முதல் நாள். 2ம் தேதி அமாவாசை அன்றே படிகளில் கொலு பொம்மையை அடுக்க ஆரம்பிச்சிடலாம். அன்று காலை 9 மணி முதல் 11 மணிக்குள் கொலு பொம்மைகளை வைக்கலாம்.
தீபாராதனையும் பண்ணுங்க. காலை அடுக்கினால் மாலை 6 மணிக்கு மேல் தீபாராதனை காட்டலாம். 3ம் தேதி என்றால் காலை 8 மணி முதல் 9 மணி வரை கொலு வைக்கலாம். தீபாராதனை 10.30 மணி முதல் 12 மணி வரை காட்டலாம். மலர்கள் வைத்து குங்கும அர்ச்சனை பண்ணலாம்.
அபிராமி அந்தாதியைத் தினம் பாராயணம் பண்ணலாம். 100 பாடல்கள் இருக்கு. ஒரு நாளைக்குப் பத்து பாட்டு வீதம் படிக்கலாம். குங்குமம், மஞ்சள், பூ, வளையல், கண்ணாடி, சீப்பு, ஜாக்கெட் பிட், புடவை என அவரவர் வசதிக்கேற்ப வைக்கலாம்.
நம் வீட்டுக்கு வருபவர்களுக்கு இந்தத் தாம்பூலத்தை வைத்து வழிபடுங்கள். திருமணத் தடை அகலும். நவராத்திரி காலத்தில் குழந்தைகள் வந்தால் பென்சில், பேனா என ஏதாவது கொடுக்கலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.