கடந்த சில ஆண்டுகளாக, இணையதளங்கள் மற்றும் ஆன்லைனில் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், மருத்துவ பரிசோதனைக்கு எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் விளம்பரங்கள் வருகின்றன. சாதாரணமாக சுகர் பரிசோதனை செய்தாலே அதற்குக் குறைந்தபட்சம் 100 ரூபாய் செலவாகும். ஆனால் சின்ன பரிசோதனையிலிருந்து பெரிய பரிசோதனை வரை இலவசமாக செய்து கொடுக்கிறார்கள் என்றால், அதில் ஏதாவது விஷயம் இருக்கக்கூடும் என்பதை பரிசோதனைக்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டும்.
இலவச மருத்துவ பரிசோதனை என்ற விளம்பரத்தை நம்பி பரிசோதனை செய்யச் சென்றால், அவர்கள் இலவசமாக பரிசோதனை செய்து தருவார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், அதிலேயே அவர்கள் நிற்க மாட்டார்கள். அந்த ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து, உங்களுக்கு எந்தெந்த நோய்கள் உள்ளன எனவும், எந்த மருத்துவர்களை நீங்கள் அணுகினால் அவர்கள் இதற்கான சரியான சிகிச்சை அளிப்பார்கள் என்றும் அறிவுறுத்துவார்கள். நாமும் நமது நோயை குணப்படுத்த விரும்பி மருத்துவர்களை அணுகினால், அவர்கள் தேவையில்லாத மருந்துகளை எழுதி தருவதாகவே இருக்கும்.
இந்த இலவச மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தவர்கள் தங்கள் அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கூடவே, இல்லாத நோய்களுக்காகவும் சிகிச்சை செய்யும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் நோய்களை கண்டறிவதற்காக மட்டுமல்ல, புதிய நோயாளிகளை உருவாக்குவதே நோக்கமாக வைத்துள்ளார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.
எனவே, “இலவச பரிசோதனை” என்று வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். உங்களுக்கு தேவையான மருத்துவர்கள் பரிந்துரை செய்த பரிசோதனைகளை மட்டும் உரிய கட்டணத்தை செலுத்தி, நம்பகமான முறையில் செய்துகொள்ள வேண்டும் என்பதாக அறிவுறுத்தப்படுகிறது
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
