கண்ணதாசன் சொல்லச் சொல்ல வேகமாக எழுதிய பஞ்சு அருணாச்சலம்… வாழ்க்கையின் டர்னிங் பாயிண்டே அதுதானாம்!

By Sankar Velu

Published:

ஆரம்பத்தில் ஏஎல்.ஸ்டூடியோவில் செட் அசிஸ்டண்ட்டாகப் பணியாற்றிக் கொண்டு இருந்தவர் தான் பஞ்சு அருணாச்சலம். மாலை நேரத்தில் சில சமயங்களில் தன் சித்தப்பா நடத்திக் கொண்டு இருக்கிற தென்றல் பத்திரிகை அலுவலகத்துக்குச் செல்வார் பஞ்சு அருணாச்சலம்.

ஒருவருடைய வாழ்க்கையில் எப்போது அதிர்ஷ்டம் வரும்னு யாராலும் சொல்ல முடியாது. அவரவர் திறமைக்கேற்ப அந்த நாள் வெகு சீக்கிரமாகவும் வரலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டும். அப்படி ஒரு அருமையான சம்பவத்தை இப்போது நாம் பார்க்கலாம்.

ஒரு நாள் அவரைப் பார்த்த கண்ணதாசன் ‘மதராஸில என்ன பண்ணிக்கிட்டு இருக்கே’ன்னு கேட்டாராம். அதற்கு ‘சித்தப்பா ஸ்டூடியோவுல தான் செட் அசிஸ்டண்டா இருக்கேன்.

எனக்குப் பத்திரிகைத் துறையில ஆர்வம் இருப்பதால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கு வருவேன்’ என்றாராம். ‘அப்படியா நீ எந்தெந்த நாவலாசிரியர் எழுதிய நாவல்களை எல்லாம் படிச்சிருக்க’ன்னு சொல்லு என்று கண்ணதாசன் கேட்டுள்ளார். அதற்கு லியோ டால்ஸ்டாய், மபொசி, வி.சி.காண்டேகர், சரத்சந்தர் என்று தான் படித்த நாவல் ஆசிரியர்களின் பெயர்களைப் பட்டியலிட்டார்.

அவர் அந்தப் பெயர்களை எல்லாம் சொல்லும்போது இவர் சாதாரண ஆள் இல்லைன்னு கண்ணதாசனுக்குப் புரிந்துவிட்டது. ‘நான் சொல்லச் சொல்ல நீ எழுதுகிறாயா’ன்னு கேட்டார். ‘எழுதுறேன்’னு சொன்னார். கவிஞர் கண்ணதாசனைப் பொருத்தவரை கட்டுரைகள் ஆனாலும் சரி. கவிதைகள் ஆனாலும் சரி. திரைப்படப் பாடல்கள் ஆனாலும் சரி.

PA
PA

அவருடைய வாயிலிருந்து வார்த்தைகள் மடை திறந்த வெள்ளம்போல வந்தது வந்தபடி இருக்கும். அவர் சொல்லச் சொல்ல எழுதுறதுங்கறது சாதாரண விஷயமல்ல. அவர் சொல்லச் சொல்ல தென்றல் பத்திரிகைக்கான தலையங்கத்தை எழுதி முடித்தார் பஞ்சு அருணாச்சலம். அப்போது ஒரு டீயை ஆர்டர் பண்ணிக் குடித்தார் கண்ணதாசன்.

குடித்து முடித்ததும் பஞ்சு அருணாச்சலம் தான் எழுதிய பேப்பரைக் கொடுக்க அதைப் படித்துப் பார்த்த கவிஞர், பரவாயில்லையே… நான் வேக வேகமாகச் சொன்னதை ஒண்ணு விடாம அப்படியே எழுதியிருக்கீயே… நாளையில இருந்து எங்கிட்ட வேலைக்குச் சேர்ந்து விடுன்னு சொன்னாராம்.

பஞ்சு அருணாச்சலத்தை அதிர்ஷ்ட தேவதை அணைத்துக் கொண்ட நேரம். ஒரு திரைப்படப் பாடலாசிரியராக, கதாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராகவும் பஞ்சு அருணாச்சலம் உயர்ந்தார் என்றால் அதற்கான ஆரம்பப்புள்ளி அங்கே தான் தொடங்கியது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.