புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடி

By Keerthana

Published:

சென்னை: போலி ஆவணங்களை பயன்படுத்தி நீர்நிலைகள், பொது இடங்களில் அரசு நிலத்தை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து பலர் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் கட்டி வசித்து வருபவர்கள் இனி எந்த காலத்திலும் பட்டா வாங்க இயலாது என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டியவர்கள், சாலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு தமிழக அரசு வகுத்துள்ள விதிகளின்படி முதலில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்களிடம் உரிய பதில் பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்காவிட்டால் போலீசார் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவில்லை என்று பல்வேறு வழக்குகள் நடந்து வருவதால், ஐகோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் தமிழக அரசு, நீர்நிலை மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 குழுக்களை அமைத்திருக்கிறது. அதில் மண்டல அளவிலான குழுக்கள் ஆக்கிரமிப்புகளை கண்டறியும். மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதனை மாநில அளவிலான குழுக்கள் கண்காணிக்கும்.

இந்த நிலையில் அரசு நிலம் ஆக்கிமிரப்புகள் தொடர்பாக தமிழக அரசு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக கிரிமனல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் அவர்களிடம் இருந்து அரசு நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் அரசு நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் மீட்டது தொடர்பாக ஒரு முறையான பதிவேட்டினை பராமரிக்க வேண்டும். அதில் அந்த நிலத்தை சர்வே எண் உள்பட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பணிகளை நிலநிர்வாக ஆணையர் கண்காணித்திட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.