கேள்வி கேட்டால் பதில் சொல்லும் நடிகர், நடிகைகள்.. மெட்டா ஏஐ சாட்பாட் புதிய அம்சம்..!

By Bala Siva

Published:

 

செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு விஷயங்களை அறிய இயலும் வசதிகள் கிடைத்த நிலையில், தற்போது அதில் கூடுதல் அம்சமாக ‘சாட்’ எனப்படும், அதாவது நம் குரல் வழியாக கேள்வி கேட்டு, குரல் வழியாகவே பதில் பெறும் வசதியும் அறிமுகமாகியுள்ளது. ஏற்கனவே இந்த வசதி ChatGPtயில் நிலையில், தற்போது மெட்டாவின் ஏஐ சாட்பாட்டில் புதிய குரல் வசதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் மல்யுத்த வீரர்கள் பதில் சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! ஆம், இதற்காக ஹாலிவுட் நடிகர், நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக மல்யுத்த வீரர் ஜான் சீனாவிடம் கூட பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

நாம் கேட்கும் சந்தேகங்களுக்கு ஜான் சீனா உள்பட பல பிரபலங்களின் குரல் வழியாக பதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான குரல் வசதியை விரும்பினால், அதையும் பயன்படுத்திக் கொள்ள பயனர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த குரல் வசதி முதலில் அமெரிக்க மற்றும் ஆங்கில மொழி பேசும் நாடுகளில் அறிமுகமாகி, பின்னர் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில், ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம், மெட்டா நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் அறிமுகமான நிலையில், இதன் மூலம் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பயன்படுத்தலாம். மின்னஞ்சல் எழுதுவது, கவிதை மற்றும் கதை எழுதுவது, டெக்ஸ்ட்களை சுருக்கி தருவது, மொழிபெயர்ப்பு செய்வது போன்ற பல அம்சங்களை இந்த ஏஐ பயனர்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.