CID Sakunthala: பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடகங்களில் தனது பயணத்தைத் தொடங்கி, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சகுந்தலா. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று பெங்களூருவில் அவர் மரணமடைந்தார். அவருக்கு 84 வயதாகிறது.
சேலத்தைச் சேர்ந்த சகுந்தலா, பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த ’சிஐடி சங்கர்’ படத்தில் ஜெய்சங்கருடன் நடித்ததின் மூலம் “சிஐடி” என்கிற பட்டத்தை பெற்றார்.
தனது நடனத் திறமையால் சினிமாவில் நுழைந்த சகுந்தலா, குணச்சித்திர நடிகையாய் மாறி, பின்னர் கதாநாயகியாகவும் உயர்ந்தார். சிவாஜி கணேசனுடன் தில்லானா மோகனாம்பாள், பாரத விலாஸ், வசந்த மாளிகை உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
சில ஆண்டு காலம் சினிமாவில் இருந்து விலகிய அவர், பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக அவர் நடிப்பதை நிறுத்தி விட்டு பெங்களூருவில் தனது மகள் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் நடிகை சகுந்தலா கடந்த சில நாட்களாக வயது முதிர்வு தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொண்டிருந்த நிலையில் இன்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சில நிமிடங்களுக்குள் உயிரிழந்தார். அவரது மகள் செல்வி இதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார். நடிகை சகுந்தலாவின் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.