டெல்லி : கூகுள் பே, பே டிஎம் உள்ளிட்டயுபிஐ செயலி மூலம் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவர் அல்லது நிறுவனங்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புவது என்பது இப்போத அதிகபட்சம் ஒரு லட்சம் என்ற அளவில் உள்ளது. அதேநேரம்பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட சிலவற்றுக்கு இந்த வரம்பு ரூ.2 லட்சமாக இருக்கிறது. இந்நிலையில் வரி செலுத்துதல், பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றுக்கான யுபிஐ பணப்பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்தது. இப்போது ரொக்க பரிவர்த்தனைகள் சிறிய பெட்டிக்கடைகளில் கூட நடப்பது இல்லை… 500 ரூபாய் உடன் சென்று பால் வாங்க போனால் கூட, சில்லறை இல்லை என்பார்கள், இதேபோல் 100 ரூபாய் கொடுத்து ஏதாவது வாங்கிவிட்டு மீதிப்பணம் கேட்டால் சில்லறை இல்லை என்றே பதில் வரும்.
யாருமே பணம் கொடுத்து பொருட்கள் வாங்குவது இல்லை.. எல்லாருமே கூகுள் பே, போன்பே என்று யுபிஐ பரிவர்த்தனை மோடில் தான் பணம் செலுத்துகிறார்கள். பலருக்கு வங்கி கணக்கு மூலம் பணம் அனுப்பவும் விஷயம் இருப்பதையே மறந்துவிட்டனர். அந்த அளவிற்கு அன்றாடம் வாழ்க்கையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
தற்போதைய நிலையில், கூகுள் பே, பே டிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலி மூலம் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவர் அல்லது நிறுவனங்களின் வங்கிக் கணக்குக்கு எளிதாக பணம் அனுப்பலாம். எனினும் ஒரு முறை பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.1 லட்சமாக என்கிற அளவில் தான் இருக்கிறது. பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட சிலவற்றுக்கு இந்த வரம்பு ரூ.2 லட்சமாக இருக்கிறது
இந்நிலையில், யுபிஐ செயல்பாட்டை நிர்வகிக்கும் மத்திய அரசின் என்பிசிஐ அமைப்ப்பு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், “யுபிஐ மக்களின் விருப்பமான பணப் பரிவர்த்தனை முறையாக உருவெடுத்துள்ளது. எனவே, சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கான ஒரு முறை பரிவர்த்தனை உச்சவரம்பை உயர்த்த வேண்டி இருக்கிறது. ஆகவே வரி செலுத்துதல், மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கான கட்டணம், புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மற்றும் ரிசர்வ் வங்கி தொடர்புடைய ரீடெய்ல் நேரடி முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றுக்கான ஒரு முறை பணப் பரிவர்த்தனை உச்சவரம்பு செப்டம்பர் 16-ம் தேதி முதல் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் . எனவே, வங்கிகள், யுபிஐ செயலிகள், பணப்பரிவர்த்தனை சேவை வழங்குவோர் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறு கூறியிருந்தது.
என்பிசிஐ-யின் இந்த அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இனி மேற்குறிப்பிட்ட சேவைகளுக்கு ஒரே முறையில் ரூ.5 லட்சம் வரை கூகுள் பே, பேடிஎம்,, போன் பே, பாரத் பே, அமேசான் பே உள்ளிட்ட யுபிஐ ஆப் மூலம் பணம் செலுத்த முடியும். எனினும், இந்த உச்சவரம்பை தங்கள் வங்கிகளும் யுபிஐ செயலிகளும் அதிகரித்துள்ளனவா என்பதை பொதுமக்கள் முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.